Friday, July 15, 2011

மயிலை….. - 02



அவர் ஒரு துறவி !!
பரமஹம்ஸர் என
பறை சாற்றப்பட்ட
பரமோத்தம பிறவி !!

“புவிமிசை பிறந்தவர்
பரம்பொருள் உணர வேண்டும் !!
உணரின் பந்த பாசத்தில்
உழன்று ஏன் திணற வேண்டும் ?”

அது அவரது கூற்று !
அந்தோ!
புற்று நோயால்
புசித்தது அவரை கூற்று !!

கூற்றுவன்
கண்டான் அவரது தொண்டை !!
காணவில்லை அவரது தொண்டை!!

காலப் போக்கில் அவரது
கருத்துக்கினிய சீடரை

சிகாகோவில் சேர்த்தது
சிற்றிளங்காலை காற்று !!

எழுந்தது மன்பதை
”எழுமின்! விழுமின்!” எனும்
ஏரார்ந்த உரை ஏற்று !!

மருத்துவம்
மக்கள் உயர்வு
மத நல்லிணக்கம்

ஆரம்பக் கல்வி
ஆபத்துதவி என

இராம கிருஷ்ணருக்கு பின்
இலட்சோப லட்சம் தொண்டர்கள்

அளப்பரிய தொண்டுகளை
அனேகர்க்கு இயற்ற

இயக்கப்பட்ட இடம்
இராமகிருஷ்ண மடம் !!




அப் பணிகளை அது
அப்பழுக்கற்று
அளவு பிசகாது
அன்றும் இன்றும் செய்து
அறிவிக்கின்றது திடம் !!

Labels: ,

Wednesday, July 06, 2011

மயிலை…..- 01



அவன் சைவத்தின் ஆதி !!
அவள் அவனில் பாதி !!

கண்ணுதற் கடவுளும்
கருத்திற்கினியவளும்
வாழுமிடம் கயிலை !!
கபாலியாய் கற்பகமாய்
சூழுமிடம் மயிலை !!

”என்னைக் காத்தருள்”
என அவளைப் போற்றினால்
எந்நாளும் பாப நாசம் !!

அப் பாடலன்றி
அனேக பாடலில்
அளவின்றி
அதைச் செய்தார்
பாபநாசம் !!

சிவனே என்று
சிவனே! என்று
சிவனே போற்றினார்
சிவத்தை !!

அகற்றினார் அனேகர்
அவத்தை !!

சிவனை ”நம்பிக்
கெட்டவர் எவர்” ?
அதனையும் பாடினார்
அவர் !!

- தொடரும்

Labels: , ,