Friday, February 12, 2010

ஏழு சுரங்களுக்குள். . .- 2

1)
பாடகர் பலர்
பாடலாம் பழந்தமிழ்
பாரதியார் பாடலை

வரிக்கு வரி
வகை வகையாய் ராகம் மாற்றி !!
ஊர் களிக்கிறது அவரை
உடனுக்குடன் போற்றி !!

அடைவு
ஆவர்த்தனம்
அனுலோமம்
பிரதிலோமம்
மூர்ச்சை என

மூர்ச்சையடையுமளவு
சங்கீதம் விரிந்திருக்கிறது
சமுத்திரமாக !!

பாதுகாக்க வேண்டும்
பாரம்பரிய சங்கீதத்தை
பாதுகாவலர் நான் என
பறை தட்டும் எவரும்
பத்திரமாக !!

சண்முகப்ரியாவை
”சண்முக தெய்வ மணியே”யில்
சஞ்சாரம் செய்து
சரமாக சுரம் தொடுக்கும்

சிறுவன் முன்
சீனியர் வித்வான்களின்
பொறுப்பு கூடுகிறது !!
அதையே தான்
அடியார் கூட்டம்
அந்நாள் முதலாய் தேடுகிறது !!

2)
எங்கும் எதிலும்
எந்நாளும் நாம்
எடுத்துக் காட்டுகிறோம் குறையை !
எக் குறை
எவ் வழியில்
எங்ஙனம் களையலாம்
எனப் பலர்
எண்ணுவதில்லை முறையை !

தவறு செய்தார்
தவிடளவு கவனம் சிதறாமல்...
தாறுமாறாய் பிதறாமல்....

வடிவாக போட்டியை
வழி நடத்தி....
தட்ட வேண்டியதை
தட்டி நெறிப் படுத்தி ....

எப்படிப் பாடினால்
எச் சுரம் சொலிக்கும்
என எடுத்துரைத்து .....
தன் திறம் முன்னிறுத்தாது
தற்பெருமை குறைத்து...

மேன்மையாய் வழி நடத்திய
மேதகு நடுவர்கள்

மேலாண்மைக்கும்
மேற்பார்வைக்கும்

புதியதொரு பரிணாமம்
புனைந்தனர் !!
இன்னிசை மழையில்
இயல்பிழந்து மக்கள் நனைந்தனர் !

American Idolன்
ஆதாரம் கேலி !!
நமது ஆதாரம் ”நெய்வேலி” !!

3)

சோதித்தார் சாடாது
போதித்தார் வாடாது

கண்ணுள் பெற்றோர்
கனவுகளை தாங்கி....
கடமையை உள் வாங்கி....

சாதித்தது இளவட்டம்
சிரமேற்கொண்ட பணியில் !!
கருத்துக்கும் காதுக்குமினிய
கர்நாடக சங்கீதம்
கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது
சிறாரது விரல் நுனியில் !!

மேடை கண்டு அஞ்சாது
நாழிகை நேரம் மிஞ்சாது

இரத்தினச் சுருக்கமாய்
இராகங்களை உருக்கமாய்

தவழ விட்ட இளசுகளின்
தாகம் என்னை தாக்கியது !!
பெருங்குறை ஒன்றை
பெருவாரியாக போக்கியது !!

கண நேரத்தில் கழன்றது
கர்நாடக சங்கீதத்தின் மூப்பு !!
இனி வரும் காலத்தில்
இந்த இளைஞர்கள்
இசைக்கு அளிப்பார் காப்பு !!

நாரத கான சபையில்
நாளை இச் சிறுவர்
நுழையும் வேளையில்

முதல் நிலை பாடகர்க்கும்
முகத்தில் வியர்வை
முத்து முத்தாய் பெருக்கெடுக்கும் !!
உழைத்துப் பாடி
உயரம் அடைய
ஊக்கம் கொடுக்கும் !!

4)

அமர்ந்த இடம்
அமெரிக்காவிலிருந்து

இந்தியாவில்
இது சரியில்லை
இது நெறியில்லை

என
எண்ணிப் பேசி நாம்
என்ன கண்டோம் ?

முன் நின்று
முனையாத வரை
முன்னேற்றத்தை நாம்
முழுமையாய் அண்டோம் !!

சாக்கடை நெடியிலும்
கொசுக் கடியிலும்

ஏற்றத் தாழ்விலும்
ஏதுமிலா வாழ்விலும்

அவலச் சூழலிலும்
அரசியல் ஊழலிலும்

தான் அடையாததை
தன் சந்ததி அடையட்டும்...
கட்டுண்ட தன்
கைவிலங்கு உடையட்டும்..

என
குடும்பச் சுமை தாங்கி
குன்றாய் கடன் வாங்கி

கண்கவர் பெண்
கனவுகளோடு துயில....
கடைத்தெருக் கோடியில்
கர்நாடக சங்கீதம் பயில...

கொண்டு விட்டு
கூட்டி வந்து…
வாங்க வேண்டியதை
வாங்கித் தந்து…..

பிரயத்தனப்படுகிறானே அந்த
பேரன்புமிகு இந்தியத் தந்தை ...
அவன் முன் நான்
ஆகின்றேன் கந்தை !!

எல்லாம் உள்ள
வல்லரசு நாட்டில்

எதுவுமே நமக்கில்லை என
என்றும் நான் எண்ணுகிறேன் !!
யார்க்கு நான்
யாது பண்ணுகிறேன் ?!

தேவைகளை குறைத்து
துயரங்களை மறைத்து

குன்றிமணி அளவு பிறழாது
குடும்பத்தை வழி நடத்தி...
விடியும் எனும் நம்பிக்கையில்
வினாடிகளை கடத்தி...

மேடையில் தன் மகவு
மேம்பாடு அடையும் நாள்
மேல்மூச்சு விடுகிறாள்
இந்தியத் தாய் !!

புளகாங்கிதத்தில்
புகழ் பாடியே
புண்ணாகிறது என் வாய் !!



பரத் சுந்தர் நாளை
பறப்பார் கிளீவ்லேண்டுக்கு !!
வரிசையில் நிற்பேன் நான்
Shake Hand க்கு !!

Labels: , , ,

ஏழு சுரங்களுக்குள். . .




நிமிர்ந்து நிற்கிறது
எந்தன் தலை !!
நிலை கொள்ளக் காரணம்
இரட்டை இலை !!

செவிக்கு உணவு கேட்டார்
செறிவோடு பெருமையுற....
செய்யாதார் சிறுமையுற....

செயற்கரிய செயலை
செம்மையாக
செய்து முடித்திருக்கிறது
“செயா” தொலைக்காட்சி !!
வசந்தம் வருமுன்னே
வந்தது நமக்கு மீட்சி !!

“Carnatic Music Idol” என்ற
அஷரங்களின்
அரசன் யார்? எனும்
அர்த்தம் உள்ள
அந்த போட்டி

நம் சமூகத்திற்கு
நல் வழிகாட்டி !!

”தைவதத்தில் துவங்கு !
நிஷாதத்தில் நிறுத்து !! “

”விளம்ப காலத்தில்
கிளம்பு !!

துரித காலத்தில்
துவளாது சுரங்களை விவரி !!
காணாமல் போகாதே
வழி தவறி !! “

”கணக்கோடு தாளத்தை
கச்சிதமாய் போடு !!
கணீரென பாடு !! “

”நற்றுணை” நமச்சிவாயமே எனும்
நம்பிக்கையை நாம்
நாளும் மறவாதிருக்க
நற் பொருளோடு
நற்றவற்றவர் இயற்றிய
நலமிகு பாடலை

நயமாக பாடாத
நினது சாமர்த்தியம் என்ன ?

திரும்பச் சொல்
திருத்துகிறேன் நான்
சாகித்தியம் என்ன ?

”ஆறில் ஒருவனே !!
போட்டியாளரில் சிறுவனே !!



மக்களின் எச்சரிப்பென்ன ?
நீ பாடிய ஷண்முகப்ரியாவில்
நிஷாதத்தின் உச்சரிப்பென்ன ?”

”சுட்டிப் பெண்ணே !
குட்டிப் பெண்ணே !!

முதலிடம் உனது தேடல் !!
முகவரி மறக்கலாமா
உந்தன் பாடல் ?!

சுரம் அதன்
தரம் விடுக்க

போனாள் ”நாயகி” ”தர்பாருக்கு” !!
போதோடு நீ
போகலாம் இனி ஊருக்கு !!

ஜதியினின்று வழுவாதே !!
நாங்கள் உன் மீது வைத்த
நம்பிக்கையினின்று நழுவாதே !!

என...
வகைக்கேற்ப
வளரும் கலைஞரை

வளர்ந்த கலைஞர்
வறுத்து எடுத்தார் !!

கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
கேட்டார் களிப்புற
போட்டியாளர் பாடலால்
பதில் கொடுத்தார் !!

திரும்பிய பக்கமெல்லாம்
திரளாக வந்த சுரத்தில்

அடைந்தேன் நான்
அளவிலா திளைப்பு !!
அகன்றது என்
”அந்த நாளும் வந்திடாதோ” எனும்
அங்கலாய்ப்பில் வந்த களைப்பு !!

ஆழ் மனதில்
ஆழங்கால் பதிக்குமாறு
எண்ணங்கள் சில
எங்கிருந்தோ உதிக்கின்றன !!

நம் பலத்தை
நாம் ஆராய வேண்டும் எனும்
நற் சிந்தையை அவை
நம்முள் பதிக்கின்றன !!

-- தொடரும்

Labels: , , , , , , ,