“கை” க்கு எட்டா தூரத்தில். . .
அழுகைத் துளியாய்
அமைந்த தேசம் !!
அனுதினம் அதனுள்
அளப்பொண்ணா நாசம் !!
ஆங்கழுபவன்
ஆதிநாளில்
ஆங்கு சென்ற நம் மவன் !!
ஆபத்தென்றவனுக்கு ஓடோடி
ஆதரவளிக்கவில்லை நம்மவன் !!
பற்பல நாள்
பற்பல நாடுகள்
கலவரத்தை முன்னிட்டு
கலந்து பேசிய
கணக்கற்ற வார்த்தைகளும்
கலங்கியவன்
கண்ணீர் துடைக்க
கைகொடுக்கவில்லை !!
அமைதி காக்கும் படையை
ஆதி நாள் அனுப்பிய
”கை” யாலாகா
“கை” அரசும் இன்று
“கை” கொடுக்கவில்லை !!
சண்டையை விலக்குவதா?
சண்டையினின்று விலகுவதா?
பற்பல வாதங்கள்
விழுகின்றன காதில் !!
வாதம் என்று வருங்கால்
வாதிடுவதில் தீதில் !!
அருமையான எம் தலைவரை
பெருமையான பெரும்புதூரில்
கொன்றவன் வேலுப்பிள்ளை !!
அத்துயரம் இன்றுவரை
அடி மனதில் யாருக்கில்லை ?!
அத்தகையோன் அழுகையை
அலம்புவதா ?
வெறியேறியோனுக்கு உதவியாய்
வெளியேறி கிளம்புவதா ?
இது உள்நாட்டு யுத்தம் !!
இது உண்டங்கு நித்தம் !!
நலமுறவேண்டும் அவரென
நமக்கேன் வம்பு ?!
நமக்கு இருக்கிறது நாளும்
IPLன் ஆறு கம்பு !!
இரத்த வெறி மிகுந்து
இந்தியாவுள் புகுந்து
நாச வேலை செய்கின்றார்
நாளும் சிலர் !!
நம் நாட்டிலா? என்று
நம்ப முடியாது பதறி
நகம் கடிக்கிறார்
நம்மிடையே பலர் !! !!
நம் பாதுகாப்பே
நமக்கு இன்று கேள்விக்குறி !!
சிக்கலில் தவிப்பவனுக்கு
சிறிது உதவுவதை
சிரமேற்க மறுக்கிறது பலரின்
சிந்தனைத் தறி !!
அன்பர்களே !!
அங்கு அவதியுறும் மக்கள்
அப்பாவிகள் !!
அவர்களை அல்லும்
அணுஅணுவாய் கொல்கின்றனர்
அப் பாவிகள் !!
தமிழ் மொழி உமக்கு
தவிடளவாவது புரியுமாயின்...
தமிழை
தமிழரை
காணுங்கால் உம் கண்
காதலோடு விரியுமாயின்...
ஒரு முறையேனும்
ஒரு நிமிடமேனும்
அவன் துயரை வாசியுங்கள் !!
அவன் நிலையை யோசியுங்கள் !!
என் முகம்
”புலி” முகம்
என்று அவன் கோரவில்லை !!
என்றும் கூறவில்லை !!
ஆண்டாண்டு காலம்
அவன் போராடுகிறான்
அவனது உடைமைக்கும்
அவனுக்குண்டான உரிமைக்கும் !!
என்ன அவை
என்பதை எழுத
இருப்பதில்லை போது
எக் கரு மைக்கும் !!
அவனுக்காக
அச் சாமனியனுக்காக
ஒரு நாளேனும்
ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள் !!
மனிதாபிமானம் எனும் சொல்லுக்கேனும்
முக்கியத்துவம் கொடுங்கள் !!
Labels: atrocities against Tamils, Congress party, LTTE, Rajiv assassination, srilankan tamils, Velupillai prabhakaran