அழைத்தான் அரங்கன்....
அது..
விடிந்தும் விடியாத
இளங்காலை நேரம் !!
காலடி மண்ணில்
கால் மணி பெய்த
கோடை மழையின் ஈரம்...
களிறு பிளிற
முரசு முழங்க
சங்கம் ஊத
அவ்வூர்த் தலைவனும்
அவனுறை பிராட்டியும்
அத்தகு வேளையில்
அனுதினம் எழுகின்றனர்...
அண்ட சராசரத்துள்
அத்தனை கோயிலின்
அத்தனை தேவதைகளும்
அவ்வேளையில்
அவர்களை தொழுகின்றனர்..
கண் முன்னே
காணலாம் அக்காட்சியை
“கதிரவன் குணதிசை” என
தொண்டரடிப் பொடியில். .
தவற விட்டேன் அந்த
தகத்தகாயமான காட்சியை
சில நொடியில்..
அவ்வாறு துயிலெழுபவன்..
அரங்கத்துள் உறைபவன் !
அடியார் துயருற்றால்
அவசரமாய் விரைபவன் !!
இரவு நிறத்தவன் !!
அரவு மீது கிடப்பவன் !!
தன் கையை
தலைக்கு வைத்து
தகவாய் படுத்திருப்பவன் !!
தமியோர் தாளொணாது
தன்னிடம் வைக்கும் துயரை
செவி மடுத்திருப்பவன் !!
தீவினில் இருப்பவன் !!
தீவினை நோக்குபவன் !!
தீவினை போக்குபவன் !!
சைவமா? வைணவமா?
பாலம் உண்டா? இல்லையா?
இதில் அக்கறை
இவனுக்கு இல்லை !!
சர்ச்சைக்கு அப்பாற்பட்டது
சாரங்கன் எல்லை !!
எண்ணுவதில்லை இவன்
”எக்கலை?” எனும் சிக்கலை !!
எத்தரப்பாகிலும்
எந்நாளும் நேசிக்கின்றான்
எதிர் வரும் மக்களை !!
அன்பர்களே !
தசாவதாரம் தொடங்கி
தாளாக் கோபத்தில் இருக்கும்
நண்பர்களே..
திருவானைக்காவும்
திருவரங்கமும்
இன்றளவும்
இணைவது ஒரு ”பாலத்தால்” !!
இடித்தாலும் இகழ்ந்தாலும்
இந்து மதத்தை
அழிக்க முடியாது காலத்தால் !!
“உளன் எனில் உளன்
இலன் எனில் இலன்”
”அவன் இன்றி நாமில்லை
நாமின்றி அவனில்லை”
அத்தகையோன் அவன் !!
ஆண்டாள் காதலித்த மவன் !!
தூணைப் பிளந்தவன் !!
வானை அளந்தவன் !!
மத்தான ஒரு
மலை தாங்கியவன் !!
மண்ணினின்று வந்தாளுக்காக
மரச் சிலை தாங்கியவன் !!
எத்தகையோர்க்கும்
எம்மதத்தோர்க்கும்
இன்றியமையாத் தேவை அன்பு !!
இதுவே இவனது பண்பு !!
அரங்கனை
அரங்கத்தில்
அருகில் சென்று தரிசித்தேன் !!
அமோகமாய் அருச்சித்தேன் !!
மெய் மறந்தேன் !!
மனம் திறந்தேன் !!
ஐயனே !!
எனக்கென இதுநாள் வரை
எதுவும் வேண்டியதில்லை !!
நிதம் எனக்கு
நீ இருக்கையில்
வேறு எதுவும்
வேண்டியதில்லை !!
இருந்தும் என்னில்
ஒரு அவா !!
இதனைக் கேள்
மாதவா !!
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாதது போல்
எந்நாளும் இலங்குகின்றேன் !!
எத் தருணத்தில்
எதைச் செய்ய
என என்றும் கலங்குகின்றேன் !!
வைக்கிறேன் ஒரு
விண்ணப்பம் !!
வைப்பாயா அதில்
உன் ஒப்பம் ?
இம்முறை ஊர் திரும்புகின்றேன் !
இருப்பினும்
இங்கேயே வர விரும்புகின்றேன் !!
அருளைப் பெய்வாயா ?
ஆவன செய்வாயா?
வேண்டுகின்றேன் உனை
வழி கிடைக்க...
முனைவாயா நீ
விழி துடைக்க ?
ரங்கநாதன் சிரித்தான் !!
தன் வாதத்தை விரித்தான் !!
எடுத்தேன் உன் குறையை
என் கையில்! – நீ
”என்னைக் கா” என்கையில் !!
அங்கே இருப்பது போல்
இங்கே இராது !!
இதனை உணர் -
இடர் வராது !!
இங்கே வர
மனதை, மக்களை
மெதுவாய் பக்குவப்படுத்து !!
அதுவாக நடக்கும் காரியம்
அடுத்து அடுத்து !!
ரம்மியமாய் முடிந்தது
ரங்கசாயியின் தீர்ப்பால் வழக்கு !!
சப்த பிரகாரத்தை
சப்தமின்றி சுற்றி முடித்து
“முரளி கடை”யினின்று பார்க்க
விடிந்திருந்தது கிழக்கு !!
விடைபெற்றேன் அவனிடம் !!
விரைந்தேன் ஆனைக்கா சிவனிடம் !!
Labels: Andal, Nammazhwar, ranganathar, srirangam, thondaradipodi azhwar, vishishtadvaitam principle