Friday, April 27, 2007

Walmart - 01

பஜார்
பலசரக்கு வியாபாரம்
பல பொருள் அங்காடி
என
பல பெயர்களில்..

பெட்டிக் கடை
ரொட்டிக் கடை
காய்கறிக் கடை
கசாப்புக் கடை
வெற்றிலைக் கடை
விறகுக் கடை
பாத்திரக் கடை
மாத்திரைக் கடை
என
பல வகைகளில்..

ஊருக்கு ஊர்
வீதிக்கு வீதி
இந்தியாவில் உண்டு
வணிகங்கள் பல !
இல்லாத ஊர்
மிகச் சில !!

பெட்டிக் கடையில்
பீடி பற்ற
நெருப்பைத் தாங்கிய
ஒற்றைத் தாம்பு !

எதிர்த்த கடையில்
பாக்கு, சுண்ணாம்பு
வெற்றிலை, சோம்பு !

தூரமே தெரியும்
உள்ளூர் திரையரங்கில்
உலா வரும்
படம் பற்றிய
சுவரொட்டி !!
ஓராயிரம் அசுத்தங்கள்
இருக்கும் அச்
சுவர் ஒட்டி !!

துர்நாற்றம் எடுக்கும்
சாக்கடை !!
அதன் அருகில்
நாற்றம் உள்ள
பூக்கடை !!

மேலும்
லாலா கடை..
கோலா கடை...
என..

கடைக்குக் கடை
கடை விரிக்கும்
வியாபாரம் தடபுடலாய் !!
கரை உடைந்த ஏரியாய்
ஊரே திரளும் கடலாய் !!

-- தொடரும்

Monday, April 02, 2007

எந்தரோ மஹானுபாவுலு

subbudu
Picture courtesy: Hindu Images


இழந்துவிட்டது இசையுலகு
சிறகை
தேற்ற அதற்கில்லை
பிற கை

கவலைக் களை
சபாக்கள் முகத்தில்
அக் களை
களை
என இயம்ப
இல்லை ஒருவர்
யுகத்தில் !!

பத்திரிகை உலகையும்
விட்டு வைக்கவில்லை
பீடு !!
வாழ்க நீ நீடு
எவர் உனக்கிங்கு ஈடு
என வாழ்த்தியவை
வாய் விட்டு வைக்கின்றன
கூப்பாடு !!

செயற்கரிய செயல் செய்து
இயற்கை எய்திய
சுப்புடு..

பருவத்தில்
உருவத்தில்
தள்ளாத தொண்டு !
சங்கீத உலகம்
பேசும் பலயுகம்
அவர்தம்
தன்னிகரற்ற தொண்டு !!

அகாதமியில் சேஷ¤வா?
வாணி மகாலில்
சங்கரநாராயணனா ?
யார் கச்சேரிக்கு போக? என
சமரில் இருக்கும்
சனம் !!
அவர்களை அப்படி
பேச வைக்கும்
சுப்புடுவின்
இசை விமர்சனம் !!

திறமையானவரை
தூக்கு தூக்கென்று
தூக்கும் !!
ஏனையோர் பிழைகளை
இடியாய்த் தாக்கும் !!
இளைஞரை மேலும் மேலும்
என ஊக்கும் !!

முன்னணி சபாக்களில்
முன் வரிசையில்
பிரத்யேகமாக போடப்பட்டிருக்கும்
ஒரு இருக்கை !!
அவ் இருக்கையில்
அமர்ந்தவுடனே
எழுதத் தொடங்கும் சுப்புடுவின்
திருக்கை !!

பொக்கை வாயைக்
குதப்பியபடி
கையில் குறுந்தடி சகிதம்
வருவார் சுப்புடு
ஆற அமர !!
ஒரு நிசப்தம் நிலவும்
அந் நாற்காலியில் அவர்
அமர !!

பாடகருக்கு எடுக்கும்
பெரும் உதறல் !!
தப்பு செய்து
தப்புவோமா எனும்
பிதறல் !!

ராஜம் ஐயர் -
காதிலும் கம்மல்
குரலும் கம்மல்

எம்.எல்.வி -
ஒரு சுற்று குறைந்தால்
உலகம் சுற்றலாம்

செம்மங்குடி -
சங்கதியே இல்லை
சளி தான் இருந்தது

இப்படி
பெரியவரையும் விட்டு வைக்காது
சுப்புடுவின் வரிகள்
கச்சேரிக் கலைஞருக்கு
தோன்றும் நெற்றியில்
கவலை வரிகள்

திறமைக்கே இங்கு
தர வேண்டும்
மதிப்பு !
இதனை திரும்பத் திரும்பச்
சொல்லும்
சுப்புடுவின் கட்டுரை
தாங்கிய பதிப்பு !!

வயதானவர்
அனுபவத்தர்
கச்சேரியில் இடறினால்
சுப்புடு திருக்குவார்
மென்னியை !!
ஒருமுறை அவர்
ஒரு பிடி பிடித்தார்
உன்னியை !

அது...
"என்னவளே அடி என்னவளே"
வந்த சமயம்
ஊர் முழுக்க
உன்னி மயம் !!

அந்த வருட சீசனில்
உன்னிக்கு வைத்தார்
ஒரு குட்டு !!
கட்டுரை முழுக்க
கடு கடுத்தது சுப்புடுவின்
திட்டு !!

உன்னி !
பிருகாக்களை கவனி
நீ மிக
உன்னி !!

சிந்து சிறிது வியர்வை
அதுவன்றி அடைய முடியாது
உயர்வை

என
பத்திக்குப் பத்தி
பேனா எனும்
கத்தி கொண்டு
உன்னியை கிழித்தார் !!
பூஜ்யம் என
சுழித்தார் !!

அடுத்த வருடம்..
அகாதமியில்
எள் போட்டால்
எண்ணை விழாத
குறை !!
எழுந்தது திரை !!

நான் உன்னியின்
ரசிகன் அல்ல !!
என்னையும் இழுத்தது
அக் கச்சேரி
மெல்ல !!

"உன்னால் முடிந்ததே உன்னி"
என எழுதினார்
சுப்புடு அவ் வாரம் !!
அன்று தான் போனது
முந்தைய வருடத்திய கட்டுரையின்
காரம் !!

சுப்புடு இல்லாத
சங்கீத சீசன் ??..

நினைக்கவே எனக்கு
வருகிறது மலைப்பு !!
வேறென்ன வைக்க முடியும்
இக் கவிதைக்கு
பொருத்தமான தலைப்பு? !!