முடிவில் ஒரு தொடக்கம்….
தொன்றுதொட்டு நீ
தொழிலில் தீப் பந்தம் !!
எமக்கும் உனக்கும்
எண்ணற்ற வருட பந்தம் !!
எப்படிச் சொல்ல என
எமக்கு நா வரவில்லை !!
நீ அறிவாய்
நிறைய வருடங்களாய்
நிறுவனத்திற்கு நிரம்ப
வரவில்லை !!
வர்த்தகத்தில்
வரவிலிருந்து செலவு போக
வருகிறது லாபம் !!
வரவின்றி செலவிருப்பின்
வராதோ பலருக்கு கோபம் ?!
இதன்றி..
விரைந்து நிறுவனத்தை
விற்க வேண்டிய நிலை !
எவர் தருவார் இதற்கு
எக்கச் சக்க விலை ?
விலையைக் குறைக்க
தலையைக் குறை என
அன்றாடம் மேலிடம்
ஆவன செய்யுமாறு குரைக்க..
விழைகிறோம் நாங்கள்
விரைந்து செலவை சிரைக்க !!
கடைநிலை ஊழியர்
கணக்கற்றவர்க்குகடைசி நாள் அறிவிக்கப்பட்டது
இரண்டு மாதம் முன்னம் !
இற்றை நாள்இந்நிறுவனத்திற்கு
இழிநிலையே சின்னம் !!
பிரஜையில்லா ராஜ்ஜியத்தில்
பிரதம மந்திரிக்கு என்ன
பிரமாதமான வேலை ?பிரதம மந்திரிக்கு என்ன
மேலாண்மையைக் குறையென
மேலிடத்தினின்று இன்றுமேம்போக்காய் உத்தரவு !!
எவர் ஊழியத்திற்கு இனி
எவர் தான் உத்தரவு ?
இன்றைய பதினைந்தாம் நாள்
இங்குனது வேலை முடிகின்றது !!சொல்லுங்கால் நெஞ்சில்
செம்புனல் வடிகின்றது !!
என்றும் எம்மை
நினைவில் கொள்க !!
எஞ்சியதை மனித வளத் துறையில்
என்னவென்று கேட்டு
எண்ணத்தில் கொள்க !!
கை கால் நடுங்க
உலகம் இருண்டு
உடல் மருண்டு
இல்லம் சேர்ந்து
இமைப் பொழுதில் சோர்ந்து
கண்ணீரும் கம்பலையுமாய்
கனவெல்லாம் கவலையுமாய்
நயமொடு தகவல்
நண்பர்க்கு தந்து...
நடந்ததை நினைந்து
நெடுநேரம் வெந்து...
நண்பகல் நடுநிசி மறந்து..
துயரின் துக்கத்தில்
துயில் துப்புர
துறந்து..
பட்ட வேலைக்கு
பட்ட இடத்தில் விண்ணப்பித்தேன் !!
Resume எனப்படும்
தொழில் அனுபவத்தை
தொடர்ந்து புதுப்பித்தேன் !!
தினம் தெய்வத்தை வந்தித்தேன் !
திரளாய் பலரைச் சந்தித்தேன் !!
சினமும் சோகமும்
சிறிது சிறிதாய் ஆறியது !!
பக்குவப்படுத்தியது
பண்பட்ட பலர் கூறியது !!
”சமயத்திற்கு ஏற்ப
சர்ப்பம் உரிக்கின்றது
சட்டையாய் தனது தோலை !
உன்னைப் புதுப்பித்துக் கொள்ள
உதவும் புதிய வேலை !!
ஓர் பணியிலிருந்து
ஓய்வுறல்
இன்றைய தேதியில்
இலேசில் சாத்தியமில்லை !!
தத்தியோனமன்றி தெய்வத்திற்கு
தினம் வேறா நைவேத்தியமில்லை ?
இது புதியதொரு தொடக்கம் !!
இனி வரும் வாழ்க்கை
இதனுள் அடக்கம் !!
முதற்கண் மறந்திடு தீதை !
முன்னே விரிகிறது
முன்னேற்றத்தின் பாதை !!
பழைய வேலை
படித்து முடித்த காதை !!
பெருமையாய் புதிய பணியில்
பெரும் பெயரெடுக்க
பல கருத்தினை உள்வாங்க
பழக்கு உன் காதை !!
உனக்கன்றி வேலை
உலகத்தில் எவர்க்கு ?
விதியின் செயலால்
விவரிக்க இயலா அவலம்
விளையவில்லையா முன்னம்
விசுவாமித்திரனெனும் அருந்தவர்க்கு ? "
உற்சாகச் சொற்கள்
உற்றார் உறவினரிடமிருந்து
உடனுக்குடன் வந்தன !!
உள்ளத்திற்கு ஏற்றம் தந்தன !!
இருப்பினும் சித்தம்
இலகுவாய் பக்குவப்படவில்லை !
முயன்றும் கோபம்
முடிவாய் விடவில்லை !
உன்னிப்பாய் உணர்ந்து
உளவியலாளர் விவரிக்கின்றார்
உத்தியோகம் இழந்தாரது
உள நிலையை !
உலகத்தில் பலருக்கு
உள நிலையை !!
தரமற்ற தெருக் குப்பையாய்
தள்ளப்பட்ட அதிர்ச்சி…
முன்னுக்கு வர
முழக்கப்பட்ட வழியாய்
முடிந்ததே இன்றோடு
முந்தைய வேலை எனும்
முற்போக்கு முதிர்ச்சி…
நமக்கா? எனும் மறுப்பு
நமக்கே! எனும் வெறுப்பு
நம் வாழ்க்கை
நமதே எனும் பொறுப்பு
விடாமுயற்சியுடன்
வினை தேடும் சுறுசுறுப்புபதற்றத்தால் பசியின்மை
பயனற்று உணரும் தன்மை
வேலையிழந்தார்க்கு இவை
வேதனைக்குரிய அறிகுறிகள் !!
வேலையும் ஆலையுமே அவர்க்கு
வெண்ணை வைத்த உறிகள் !!
*******-----***********_***********_***********
பனி தொடக்கமும்
பணி முடக்கமும்பனி தொடக்கமும்
உற்சாகத்தை முடக்குபவை !
உத்வேகத்தை அடக்குபவை !!
”நாடும் வீடும்
நாளும் சிறக்க
விடாமுயற்சியோடு இடையறாது
வினைக்கு முற்படுபவன் முன்
இடும் பணி செய்ய
இறைவன் நிற்பான்
இடுப்பாடை மடித்துக் கட்டி”
வள்ளுவன் வைக்கின்றான்
வகையான வாக்கை
குடி செயல் வகையில் !!
அவ்வாக்கிற்கு மிகையில் !!
ஆயிரம் அவற்றை படித்து
ஆழங்காற்பட்டிருப்பினும்
நமக்கென வருங்கால்
நம்பவும் நகவும் முடிவதில்லை !!
வலியறிதல் வாசிப்பினும்
வலி நெஞ்சுள் வடிவதில்லை !!
”தேசத்தில் வேலையிழந்தோர்.."
முன்னம் நாள் வரை
முக்கிய மாலைச் சேதி !
இங்கு அதில் நாமுண்டு
இன்றைய தேதி !!”
என எண்ணுங்கால்..
எண்ணம் பதறும் !!
எண் சாண் உடம்பு
எந்நேரமும் உதறும் !!
காணச் சகியாது
கவின்மிகு மழலையர் முகம் !!
களையிழக்கும் கணப்போதில்
கண் கவர் அகம் !!
நாடித் துடிப்பு
நாளும் தெறிக்கும் !!
நம் திறன் மீது
நம்பிக்கை குறைய
நம் கனவை பறிக்கும் !!
அரங்கனும்
ஆதி வராகனும்
தல சயனும்
திருப்பதி ரமணனும்
தொழுகையிலும்
அழுகையிலும்
நிறையவே நிறைந்தனர் !!
ஏதேனும் செய்ய
ஏக காலத்தில் விரைந்தனர் !!
வெள்ளம் வடிந்தவுடன்
வெளிப்படும் நாணல் !!
அவ் வகையில் வந்தது
அவசரமாய் ஓர் நேர்காணல் !!
----***_____***______*****_____****________________*****
எமக்கு சன்மானம்என்றும் தருகின்றது விமானம் !!
விரைவு வாழ்க்கையில்
விரைந்து செல்ல
வேறுண்டோ அதற்கு சமானம் ?
பலதரப்பட்ட ஆணிகள்....
பளிங்காய் ஒளி பொருந்திய
பகட்டான ஏணிகள்....
உணவினை பதப்படுத்த
உடன் உதவும்
உயர்ரக குளிர் சாதன
உறை பெட்டிகள்...
கண் கவர்
கழிவுத் தொட்டிகள்...
பறிமாறப்படும் பருக்கைகளை
பதமாய் சூடாக்கும் அடுப்புகள்
வகுப்புக்கு ஏற்றவாறு
வகை வகையாய் இருக்கைகள்
பணிப்பெண்டிர் ஓய்வெடுக்க
பதமான படுக்கைகள்
இவை எமது தயாரிப்பு !!
இலட்சோபலட்சம் பயணியர்க்கு
இவற்றால் பூரிப்பு !!
ஆதி நாளில்
ஆகாயம் ஏறிய
எண்ணற்ற விமானம்
எக்கச்சக்க கனம் !!
எது எப்படி இருப்பினும்
எல்லா நிறுவனமும்
எங்கும் தேடுகின்றன
எரிபொருள் சிக்கனம் !!
முரணான இந்த தேடல்
முன்னேற்றத்திற்கான எமது
முக்கியப் பாடல் !!
விமான உற்பத்தியாளரும்
விமான நிறுவனங்களும்
இலேசான பாகங்களுக்கு
இரந்து நிற்கின்றார்
இங்கு எம்மை நாடி !!
உலகமே அறியும்
உதிரி பாகங்களே எமது
உயிர் நாடி !!
மூன்று வருட விற்பனையை
முக்கிய நிறுவனங்கள் பல
முன்னேற்பாடாக
எம்முடன்
முன் பதிவு செய்துள்ளன
!!இதனால் எம் தொழிலுக்கு
இப்போது வித்தரிப்பு !!
உணர்ந்தோம் நாங்கள்
உனது வேலைக்கு
உற்ற கத்தரிப்பு !!
அந் நிறுவனத்தே செய்த
அரும்பணியை
அறிவோடு இங்கு செய்க !
ஏரார்ந்த எம் நிறுவனத்தை
ஏக காலத்தில்
ஏற்றப் பாதையில் எய்க !!
வந்தது வேலைக்கான ஓலை !!
வடவரை நின்ற இறை
வழங்கினான்
வசந்தத்தோடு காலை !!
பீதாம்பரனை பிரார்த்தித்து
பீடு நடையோடு
B/E Aerospace ல்
ஒன்றிப் பணி செய்ய
ஒன்றாம் தேதியில்
ஒருங்கே வைக்கின்றேன் காலை !!
செய்யும் வேலை
செம்மையோடு செழிக்க
செறிவொடு சேவிக்கின்றேன்
செந்தூரன் வேலை !!