Wednesday, August 22, 2012

இலட்சுமண்

பைந்தமிழ் பனுவலாய்
பைய வருடிய

பதினாறு வருடத்து
பருவக் காற்று

விடை பெற்று
விலகி விட்டது !!

இடையறா இடுக்கண்ணில்
இந்தியரை இட்டது !!

வினாடி நேரத்தில்
வியாகுலம் கப்பி
விதிர் விதிர்த்து
விழி பிதுங்கி
விசனத்தில் விம்முகிறது

இந்திய கிரிக்கெட் வாரியம் !!
இழப்பினை எண்ணுகையில்
இனியதற்கு ஏது வீரியம் ?!

இலட்சிய மிகு
இலட்சுமண்

ஓடியது போதும்
ஓய்வு பெறுகிறேன் என
நின்றார் ஓரமாய் !!

நிற்கிறார் என் போன்றோர்
நிகழ்ச்சிகளை நினைந்து
கண்கள் ஈரமாய் !!

பெயரளவில் அவன்
பெருமாளின் வலக்கை !

இற்றை நாள் வரை
இயற்றினான் அவன்
இந்தியாவின் இலக்கை !!

முதலாமவன் முன்னம்
மூக்கறுத்தான் !!
நம்மவன் ஆசி அணியின்
போக்கறுத்தான் !!

ஆட்டம் ஐந்து நாள் !
ஆற அமர
ஆடப்போவது ஆர்? என்பார்க்கு

ஆறு !! நான் ஆறு என
சாற்றியவன் !!

281 மூலம்
இந்தியரை புகழுச்சிக்கு ஏற்றியவன் !!

வங்காளி அல்லாதவனை
பங்காளி என

கொல்கத்தா
கொண்டாடியது !
தேசம் கவிதைப்
பண் பாடியது !!

அந்த ஆறால்
அழகுற ஓடியது

இற்றை நாள் வரை
இந்தியர் தம் ஏர் !!
இழந்திருக்கிறது இன்று
இந்திய அணி
இரும்பு வேர் !!

அன்பனே !
அடித்துச் சொல்கிறேன்

உனது ஆட்டம்
உயர்ந்த பட்டிழை !!

ஆயினும் உன்னை
ஆராதிக்கவில்லை அதிகமாய்
பரிசு மழை !!

தனித்து நின்றாய் !!
தகத்தகாயமான தருணங்களில்
தனித்து வென்றாய் !!

தொலைவில் கேட்கிறது
சிட்னியின் கேவல் !!
விரக்தியில் வெறிக்கிறது
சரவணமுத்து ஓவல் !!

“Steely wrist” ஐ
“Second Innings Twist” ஐ

அவையும் அவனியும்
அழகுற என்று பார்க்கும் ?
எவர் ஆட்டம்
எந்நாள் இக்கவலை தீர்க்கும் ?

இருளை அகற்ற
இனி எத் திரி ?
இக் கேள்விக்கு
இனி விடையளிப்பாரா பத்ரி ?

Labels: , , , , , , ,