மயிலை…..இறுதியாக
அது இருப்பது
அடையாறு !!
அது ஆகலாமா
அழகு கவிதைக்கு இடையூறு ?
இசை அறிந்தார்
இக் கவலை நீக்குவர் !
இன்னும் கூர்ந்து நோக்குவர் !!
அதன் ஆதாரம் ஏழு !!
அவை தருகின்றன
அனேகர்க்கு கூழு !!
அதன் போதனை
சரளியும் சண்டையும் !!
புதியதாய் அது
புரட்டுவதில்லை
புரளியும் சண்டையும் !!
சுரம் என்பது மனிதற்கு
சுகானுபவம் !!
மன்பதைக்கு அதை
மாசின்றி போதிப்பது
மகானுபவம் !!
போதித்ததை வைத்து
சாதித்தல் பரானுபவம் !!
சாதித்ததில் உள்ள
சாரீர சாகித்திய குறைகளை
சாடிச் சோதித்தல் ரசானுபவம் !!
இதைத் தான்
இன்று வரை
இறுதி செய்கின்றன
இசைக் கல்லூரியும்
சங்கீத வித்வத் சபையும் !!
முதலாவது பயிற்றும்
”ஆதி”யின் ஆதியை !!
விவரம் கற்றபின்
வித்தகர்கள் செய்வார்
விழா மேடையில் மீதியை !!
டிகிரி காபியும்
தில்லானா காபியும்
இசை ஆர்வலர் அறிவர் !!
இசைவிழாவில் தெரிவர் !!
_*_*_*_*_*_*_**_*_*_*_*_*_*_
மரங்கள் வெட்டப்பட்டும்
மாசினால் கட்டப்பட்டும்
தொண்ணூறுகளில் மயிலை
தொலைத்தது குயிலை !!
கண்டது பறக்கும் ரயிலை !!
எட்டிய தொலைவில்
MRTS வர
Mall எனும்
MARTS வந்தன !!
வாடிக்கையாளர் பலம்
வாங்கும் பலம் அதிகரிக்க
வியாபாரம் பலருக்கு
வியத்தகு எழுச்சி தந்தன !!
குறுந்தகடுகளில் பதிவு செய்த
குறையில்லாப் பாடல்களுக்கும்
ஆன்மீகம் தொடர்பான
ஆத்ம தேடல்களுக்கும்
சுட்டி இழுக்கிறது
கிரி டிரேடிங்
கிளை பரப்பி !!
நடக்க இடமின்றி
கடை நிரப்பி !!
இடம் பொருள் ஏவல்
அறிந்து வருவதில்லை
புத்தகங்கள் மீது ஆவல் !!
எனவே தான் சொல்கிறேன்
எனதருமை மக்களே -
கிரி டிரேடிங் புத்தகங்களை
மயிலை வாசியன்றி
மதறாஸ் வாசியும்
கட்டாயம் வாசியும் !!
கலாச்சார பொருள்கள்
கண்கவர் ஜவுளிகள் என
கடுகளவு தூரத்தில் தான்
கிடக்கிறது ராசியும் !!
_*_*_*_*_*_*_*_*_*_*_*_
”மயிலாப்பூர் பக்கம்”
”மாமனுக்கு மயிலாப்பூர்”
திரை இசையிலும் உண்டு
திருமயிலையின் ஈர்ப்பு !!
தருவாரா நடுவர்
தகத்தகாயமான தீர்ப்பு ?
_*_*_*_**_*_*_*_*_*_*_**_*_*_
வந்தாரை வாழ வைக்கும்
வளர்மிகு சென்னையில்
வெருளுவார் கோடையில் பலர்
வெய்யிலில் வாடி வியர்த்து !!
ஓதத்தை உறிஞ்ச
ஓர் வழி உயர்ந்ததென
ஓர்ந்தார் எடுப்பார்
ஓரிழை துவர்த்து !!
கவின்மிகு சென்னையில்
காணலாம் பல சேரி !!
கிளைகள் இல்லா தாபனம்
வடசேரி !!
அந்த நாள் தொட்டு
அவர்கள் அறிந்தனர்
ஊரார் வியர்வை !!
ஆதலின் அடைந்தனர்
உன்னத உயர்வை !!
_*_*_*_*_*_*_*_**_*_*_*_*_*_
அத் தொழிலின் ஆதாரம்
அன்னம் !!
அரிந்த இலையும்
அன்னத்தின் வண்ணமொத்த
அரிசிச் சோறும்
அதன் சின்னம் !!
அதன்
பகையாளி பசி !!
பங்காளி ருசி !!
பரிமாறுதலும்
பசியாற்றுதலும்
பழமையான தொழில் !!
வீமனும் கண்டிருக்கிறான்
விராட தேசத்தில்
வியத்தகு அதன் எழில் !!
விடவில்லை ஆசை
விருகோதரனை !!
என் இல்லத்தில்
எக்கச்சக்கமாய் அது பிடித்தது
என் சகோதரனை !!
தரமணியில் உள்ள
தரமிகு கல்லூரியில்
முன்னுதவியின்றி
முதலுதவியின்றி
முனைந்து முயன்று..
முறையாய் பரிசாரகம் பயின்று..
பற்பல இடங்களில்
பகலிரவு பாராது
பழகினான் சமையலை
பலரோடு !!
புதுதில்லி, உதய்பூர் என
புதிது புதிதாய் தேடினான்
பல ரோடு !!
பலதரப்பட்ட வேலை பார்த்தும்
சொல்லொணாப் புகழ் சேர்த்தும்
அவனுக்கு இருந்தது
அழியாத ஒரு அவா !!
உயர்தர உணவகம்
உருப்படியாய் துவங்கி
ஊருக்கு பறிமாற நினைந்தான்
தன் கையால் கிண்டிய
தரமான ரவா !!
மேற் கூறிய
மேதகு எண்ணத்தில்
மேனி எங்கும் அவனுக்கு
”மேனியா” !!
தீயாய் கனன்ற அக்குறையை
தீர்த்தது கலிஃபோர்னியா !!
திரவியம் தேடி
திரை கடல் ஓடி
அக்கறையோடு
அக்கரை சேர்ந்து
நெஞ்சத்தே நிறைந்த
நெடுநாள் குறை தீர்ந்து
தலைநகர் Sacramento ல்
தனித்து நடத்தி வருகிறான்
மயிலாப்பூர் எனும்
மகத்தான சைவ உணவு விடுதி !!
உன்னத சேவை
உயர்ந்த லட்சியம்
உயர்ரக பொருட்கள் என
உய்வார்க்கு இல்லை
உடல்நலக் கெடுதி !!
தேனினும் இனிய
தென்னிந்திய உணவு வகைகளை
மயிலாப்பூரில் சாப்பிட்ட கைகள்
மறந்தும் மற்றொரு
வாயில் தாண்டா !!
வட இந்திய
விருந்து வகைகளை
விரும்பி வேண்டா !!
திகைக்க வைக்கும் ருசியால்
திரும்பிப் பார்க்க வைத்து
திரும்ப வரச் சொல்லும்
தரமான தமிழ் போண்டா !!
உணவகம் நடத்த
உருப்படியான தேவை
உடல் உழைப்பு
உடனிருப்பார் ஒத்துழைப்பு என
இரு உழைப்பு !!
இருந்தால் கிடைக்கும்
இலக்குமியிடமிருந்து அழைப்பு !!
_*_*_*_*_**_*_*_
எழுதியது போக
எஞ்சியதை எழுத
ஆங்கிலத்தில் P.S !!
மயிலை மக்கள் தம்
மகவின் எழுத்தறிவுக்கு
நிரந்தரமாக நின்று
நிழல் தருகிறது P.S !!
பாரம்பரியமிக்க பள்ளிக்கூடம் !!
பல பிரமுகருக்கு அதனில்
பால பாடம் !!
_*_*_*_*_*_*_**_*_*_*_*_*_*_
வண்ணத்துக்கு சொல்வர்
மயிலை !!
எண்ணத்துக்கு சொன்னேன் மயிலை !!
வாய்ப்புக்கு நன்றி !!
எங்கும் பிரசுரிக்க வேண்டாம்
என் சம்மதம் இன்றி !!