Monday, June 27, 2011

மயிலை – முகவுரை

அது..
ஒரு போட்டிக்காக
அழைப்பென வந்த
அறைகூவல் !!

அதிகமானது அதனால்
அடியேனது ஆவல் !!

“உயர் கவிதை எழுதுவது
உனது பிழைப்பு !!
உடன் தேவை
உன்னுடைய உழைப்பு !!

மன்னுபுகழ் சென்னையின்
மயிலை பற்றிய

மண்வாசனை சங்கதிகளை
மனங்கவர் சிந்தனைகளை

மன்பதைக்கு புரியுமாறு
மனதார விவரி !!

வந்தவைகளில் உன் தொகுப்பு
வாகை சூடிடின்

நடுவர் வீசுவார்
நயத்தகு கவரி !!

வர வேண்டிய தேதி
தர வேண்டிய சேதி

இவை இவை !!
இருக்க வேண்டும் எழுத்தில்
சுவை சுவை !!”

விதிகள் விழுந்தன !!
வினாக்கள் எழுந்தன !!

”எனக்கு இதில்
என்ன உண்டு ?
என் செய்வாய்
என் எழுத்தைக் கொண்டு ?”

எனக் கேட்டேன்
எதிர் வினா !

இருப்பினும் இருந்தது
இடையறாது

வெல்ல வேண்டும் எனும்
வெறி மிகுந்த
பகல் கனா !!

”எதை எதையோ
எந்நாளும் எழுதி
எல்லோரையும் ஏய்க்கிறாய் !!
போட்டி என வரின்
போதும் தலையைச் சாய்க்கிறாய் !!

வென்றால் தருகிறேன்
50 டாலர் !!
தூக்கி விட்டுக் கொள்
சட்டையின் காலர் !!

உரமிருந்தால் சாதி !!
உரக்கப் பேசட்டும்
உனது கவிதை
உன் கவித்துவத்தின் மீதி !! “

கனிந்து சொன்னான் அண்ணன் !!
கவி பெறப் போகும் மன்னன் !!

”துடிக்கிறது மீசை” என
பொம்மனையும்…
”பொன்னுக்கும் பொருளுக்கும்”
என கீரனையும்..

நினைந்தது மனம் !!
நின்றது மூக்கில் சினம் !!

"அன்பனே !
அரைக்காசு பெறாதவைக்கு
அல்லும் பகலும்
அல்லலுறும் நண்பனே !

புனைதல் உனது
பொழுது போக்கு !!
அங்ஙனம் எண்ணி உன்
அகச் சிந்தையை ஊக்கு !!

எழுதுதல் மானம் !!
எழுதாக்கால் ஈனம் !! "

செப்பினர் ஆர்வலர் !!
”உசுப்பி விட்டு
உடம்பை ரணகளமாக்க”
உள்ளார் ஓர் சிலர் !!

வணங்கினேன் வாணியை !!
எடுத்தேன் எழுத்தாணியை !!


-- தொடரும்

Labels: , , , ,