Thursday, March 11, 2010

ஆற்றுப்படுத்த. . .



மதம் தோற்றுவித்த மனிதன்
முன்னம் சில நாள்
மறந்தான் நற்குணங்களை !!
கடைத்தேற வழியறியாது
கழித்தான் நற்கணங்களை !!

மறந்தும் அவன் காணவில்லை
மண்ணுள் இதம் !!
எப்போதும் அவன்
ஒரு விதம் !!

இறைவன் அவனுக்காகவே
இறைவனாய் வந்தான்..
இறைத்தூதனாய் வந்தான்...
இன்னார்க்கு இன்னதென
இன்முகத்தோடு நன்னூல் தந்தான்..

மனிதன் காதை
எட்டவில்லை கீதை !!
தேடத் தொடங்கினான்
தெரிந்தே பல தீதை !!

போகட்டும் என இறைவன்
போதகனாய் வந்து
போதி மரத்தடியில் நின்றான் !!
”ஆசை விடு
அது துயர்
அனைத்துக்கும் நடு” என்றான் !!

மனிதனோ...
ஆசை வழி
ஆனந்த வழி என்றான் !!
ஆசையை
ஆர் தான் வென்றான்?

இதனூடே...
எச் சமயமும்
எச் ”சமயமும்”

எவர் பெரியர்
எவர் சிறியர்

என வாதிட...
ஒன்றுக்கு ஒன்று மோதிட..

அனைத்து மதமும்
அவரவர் தம் மக்களை
அற வழியில் உய்விக்கும்
வழி தேடின !!
அனேக நாள் ஓடின !!.

இந்து மதமும்
இன்ன பிறவும்

இந்நிலை கண்டு
அடைந்தது வருத்தம் !!
விழைக்க விழைந்தது
விரைவான ஒரு திருத்தம் !!

எவர்க்கும் ஏற்படலாம்
”எல்லாம் வல்லான்”
எங்குளான் எனும் ஐயம் !
எனினும் இயங்க வேண்டும்
எத்தடையுமின்றி வையம் !!

மனிதன் வாழ்வு
தொடங்குவது பயில்வதில் !!
அடங்குவது துயில்வதில் !!

அனுதினம் இதனூடே
அவலமும் ஆசையும்
பிடுங்கித் தின்பதை
தாங்குமா மன்பதை?

தடைப்பட்ட மனங்களை
ஆற்றுப்படுத்த வேண்டும் போதகர்கள் !!
அவர்களின்றி அவர்களை
அடக்க வரலாம் பாதகர்கள் !

ஆசிரியனாய் பள்ளி வாசலில்
ஆசாரியனாய் "பள்ளிவாசலில்"

திருக்கோயில்களில்
தேவாலயங்களில்

தெய்வத்தின் உரு
எனப்படும் குரு

ஒருவன் கொள்ளுவானாயின்
துயர் தள்ளுவானாயின்

பெறலாம் பேறு !
குருவிற்கு நிகர்
உண்டோ வேறு ?

இதை இன்னணம்
இறுதி செய்யென இயம்பிட
இருக்க வேண்டும் தலைவன் !!
இருந்தால் இருந்திருப்பான்
இமயத்தில் அன்றே ஏகலைவன் !!

மனிதனுக்கு தேவை
மனத்திடை திடம் !!
அதற்காக வேணும்
நிறுவுக மடம் !!

உட்கார்த்துக அதில்
உன்னதமான துறவியை...
பந்தக் கடலுள்
பரிதவிப்பாரை
பக்தி எனும் படகால்
பழுதற கடக்கச் செய்து
காப்பார் அவர் பிறவியை !!

என...
எம்மதமும் சாற்றின !
"தெய்வமன்றி யார் துணை"
எனும் கருத்தை மாற்றின !!

தொல்வினை வல்வினை
எவ்வினைக்கும்

உய்வினை உயர்வினை
உரைத்து…
தெளிவினை தீர்வினை
தெரிவிக்கும் குருவினை...

தெரிந்து வைத்து தான்
"தெய்வத்துக்கும் முன்"
என சொன்னதோ தமிழ் ?!
தொன் மொழிகளின்
தேவாலயம் என
போற்றப்படும் தங்கச் சிமிழ் !!

இலட்சக்கணக்காரை
இரட்சிக்கவே

சிருங்கேரியில் ஸ்தாபிக்கப்பட்டது
சாரதா பீடம் !!
துயரால் துயருற்றார்
துயரற துதிக்கும்
துளப மாடம் !!

அமைதி கொஞ்சும்
அப்பீடத்தின்
அறிவுடை அதிபதி
அன்புடைய பாரதி தீர்த்தர் !!

பார்வையாலேயே அவர்
பலரது பழங்குறையை
பரவலாய் தீர்த்தர் !!

அன்பாலே அவர்
அனேகரை ஈர்த்தர் !!

காற்றிடை வேதமும்
நாற்றிசை நாதமும்

தவழும் அவ்வூரில்
தல நாயகியை

” ஹம்ஸ காமினி !!
ஹம்ஸ வாஹினி !! “

என
தேனினும் இனிய
தேவகாந்தாரியில்

இயற்றினார் “சிவன் “
இவளது பெருமையை !!
ஒருமுறை அவளை பார்த்தால்
உணர்வீர் அருமையை !!

தண்ணளி ததும்புபவள்
சாரதாம்பிகை எனும் சாரதா !!
அருள் தர அவளும்
அருளுடை அவரும் இருக்க

அடைக்கலமாக இதர
”ஆனந்தாக்களிடம்” போவதா ?

தறிகெட்டு ஓடும் குதிரையாய்
தருக்கெடுத்த மனத்திற்கு
கட்டப்படும் லாடம்
சாரதா பீடம் !!

மெளனத்தால் மனதை
மெல்ல ஒருநிலைப் படுத்துதல்
அது கற்றுத் தரும்
அதிமகோத்துவமான பாடம் !!

சர்ச்சை சஞ்சலம்
சனங்களை சங்கடப்படுத்தும்
இவ் வேளையில்

சில கருத்துக்களை மொழிகிறேன் !!
இந்து மதத்து
இரத்தினக் கோட்பாடுகளின்
இரகசியமான சாராம்சத்தை
இறுக்கப் பிழிகிறேன் !!

1)

மானுடமே !!
தடம் மாறியிருக்கிறது காவி !!
தரணியில் பலருக்கு அது
தனம் பண்ணுவதற்கு
தரப்பட்ட சாவி !!

வாயிலிருந்து லிங்கம்
மூலையெல்லாம் சங்கம் என

சடை வளர்த்து
சாமானியரை ஏமாற்றி
சாமியார் என்பார் வாழ்கின்றார் !!
பெருவாரியாய் அவரை நம்பி
பெருந்துயரில் மக்கள் ஆழ்கின்றார்!

எங்கே போயிற்று
எம்மவரது மூளை ?
தண்டம் சமர்ப்பித்தவுடனேயே
தண்டம் என தவிர்த்திருக்கலாமே
தண்டமெடுத்த ஆளை ??

ஆங்காங்கே ஆசிரமம் !!
ஆழங்கால் பதித்தால்
ஆ! சிரமம் !!

வழித்தடங்கள் வீடாகா !!
உண்மையான அறிவுக்கு
உலகில் எதுவும் ஈடாகா !!

2)
மதியை மதி !!
மதி நிறைந்தாரை மதி !!

”சுத்த அறிவே சிவம்” !!
ஸ்திதப் பிரக்ஞனாக இருப்பதே
செயற்கரிய தவம் !!

வாழத் தக்கதாகிலும்
வளம் மிக்கதாகிலும்

வாழ்வெனில் இருக்கும் தாழ்வு !
தாழ்வையே நினைத்திருந்தால்
தள்ளிப் போய்விடும் வாழ்வு !!

ஆசைக்கும் பேராசைக்கும்
இருக்கும் வித்தியாசம் “பேர்” !!
அப் ”பேர்” பெறவே
அலைகிறார்
அனேகம் பேர் !!

“யான் எனதெனும் செருக்கு அறுப்பான்
வானோர்க்குயர்ந்த உலகம் புகும்“


அவ்வழி போகாக்கால்
அவனி உன்னை
அவ்வப்போது நகும் !!

மகான் என
மார் தட்டுவாரிடம்
மக்கள் எதிர்பார்க்கின்றார்
மனதின் கவலைகளை போக்கும்
மகத்தான மாயம் !!
அங்கு தான் தொடங்குகிறது
அநியாயம் !!

3)

பொருள் தந்தால்
அருள் தருபவன்
துறவி அல்ல !!
அவ்வாறு இருப்பவன்
அதிசயப் பிறவி அல்ல !!

கன்னியாகுமரியில்
கடல் பார்த்தவன்

மூவிரல் உயர்த்தி
மூதுரை அளித்தவன்

வைக்கிறான் கருத்தை பணிவாக !!
வையம் உய்ய துணிவாக !!

" பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு "


மனதை மயக்கி
மனிதனை முடக்குவதில்
முதன்மையானது வேறில்லை
ஆசையை விட !!
ஆயினும் முடியவில்லை
ஆண்டாண்டு காலமாய் அவனால்
ஆசையை விட !!

இன்பம் = நிறைவேறிய ஆசைகள் / மொத்த ஆசைகள்
என்ற விகிதாசாரம் !!

மேலெண் கூடினால்
மேன்மையாகும் இன்பமென்பது
மேற்கத்திய பாணி !!
கீழெண் குறையவும்
கீர்த்தி பெறலாம் என
சொன்னவன் போதிமரத்து ஞானி !!

ஆகவே இனியாகிலும்
ஆசை விடுக்க
ஆசை வைத்து
ஆசை விடுத்த
ஆச்சார்யனிடம் செல் !!
அகலும் மனதினின்று அல் !!

Labels: , , ,