மீண்டும் நான்...
சிந்தனைத் தூக்கம் அகல - அர
விந்தனைத் தொழ
சகல சனத்தோடு சல சலக்கும்
சன சமுத்திரம் கல கலக்கும்
திருவேங்கடம் சென்றேன் !!
வீழ்வு வரா வாழ்வு தரும்
வேங்கடவன் தாள்
வேண்டி நின்றேன் !!
முதல் வணக்கம் வைத்தேன்
ஆதிமூலத்துக்கு!!
ஆதி மூலத்துக்கு !!
வெண்ணைத் தாடை
கண்ணா!!
பூ ஆடை தரித்த
பூமகள் மன்னா !!
குன்று ஏறி நின்ற கோவிந்தா!!
குன்று தூக்கிய தேவகி நந்தா !!
பிறவிக் கடன் களையும்
பரந்தாமா !!
கடன் அடைத்து சளைக்காத
சஹஸ்ரநாமா !!
நெடு நேரம்
நின்று வந்தேன்!! - உனைத் தரிசிக்க
இன்று வந்தேன் !!
ஸ்ரீபதி
நின் கண்
என்கண் பதிய
உம் பதிக்கு
தம்பதியாய் வந்தேன் !!
நாராயணன் எனை
"நன்றா?" என்றான்
குமரனையும் குமரியையும் காட்டி
"கன்றா?" என்றான்
ஆம், எம் புதல்வர்
தாம் என்றேன் !!
வார்த்தை தடுமாற
வெறும் வாய் மென்றேன் !!
வரம் தரும் வரதா!!
பத்மாவதியின் பதி விரதா !!
பத்மனாபா!!
நினை பார்க்க
பிடி அவலைக் கொண்டு வந்தேனில்லை
படி கவலை கொண்டு வந்தேன் !!
முகுந்தா !!
முராரி !!
பேய்க் குணம் எனை சதா
மாய்க்கிறது !!
பதற்றம் எனை சதா
சாய்க்கிறது !!
வேண்டுகிறேன் உனை இன்று ஈண்டு !!
மனதில் வேதனை மூண்டு !!
குணம் என்றும் குன்றா
சிரம் தா !!
சினம் எனைத் தின்றா
வரம் தா !!
நான் எனது என்று ஒன்றா
மனம் தா !!
தீதா நன்றா என ஆயும்
திடம் தா !!
அனந்தா - இதனை
தினந்தா !!
மன்றாடினேன் !!
சோதி உருவினனின்
ஆதியை சோதித்தவன்
சேதி கேட்டான் !!
துயரை நான் சேதிக்கிறேன் - என்
பெயரை நீ மறவாதே!!
ஆசீர்வதித்தான் நாரணன்
அகிலம் இயங்க அருளும் பூரணன்
மனத் தாள் விலகியது !!
எழுத்தால் ஆள
எழுதும் தாள் எடுத்தேன் !!
தரை பார்த்து
பறை சாற்றும்
எழுதுகோலுக்கு தேவை
சொல்லும், சொல்ல வந்த கருத்தும் !!
வருத்தும் குறை நிறை
கருத்துமல்ல !!
தேய்வு தரும் ஆய்வுமல்ல !!
ஆகவே - விசனங்களை விலக்க
விமர்சனங்களை வரவேற்காது
விலக்கி வைக்கிறேன் !!
வாரம் ஒருமுறை
வலம் வருவேன் !!
-- தொடரும்