Friday, February 06, 2009

தண்டோரா கேட்ட தருமியாய். . .

தவிக்கிறது தமிழகம்
தரமான ஒரு நடிகர்
தவறியதால் !!
தவிக்கிறேன் நான்
தவர் அவர்க்கு
தன் கடைமையினின்று
தமிழகம் தவறியதால் !!

அவரை இழந்து அரற்றுகிறது
நகைச்சுவை உலகம் !!
அவ்வுலகில் அவரே
அனேகமாய் மற்றுமோர்
நடிகர் திலகம் !!

தமிழ் உலகிற்கு சிரிப்பூட்டவும்
தம் தொழிலுக்கு சிறப்பூட்டவும்

குண்டு ராவின்
குன்றளாவிய பணி பெரிது !!
அவர் ஒத்த நடிகரை
அதிகம் நாம் காணல் அரிது !!

ஆயிரம் பொற்காசுக்கு
ஆயாசமாக அனல் மூச்சிட்டு
ஆகாயம் பார்த்த தருமியாக...
ஓகோ ஓகோ என
”ஓஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்”
செல்லப்பாவாக....

அபூர்வ ராகங்களில்
அரு மருத்துவராம் சூரியாக....
ஏற்ற நடிப்பால்
ஏற்ற பாத்திரமாகவே அவர் மாறியாக.....
எழுதலாம் அவரைப் பற்றி விலாவாரியாக !!

காண்கிறேன் இன்று
காமெடி நடிகரிடம்
கண்ட மேனிக்கு கூச்சல் !!
கண்டிருப்பாரா அவர் நாகேஷின்
எதிர் நீச்சல் ?

மடிப் பிச்சை ஏந்தி
”மாது வந்திருக்கேன்” என…

காட்சிக்கு காட்சி
காண்பார் மனங்களை
கலக்கியவர் !!
பார்த்தார் நெஞ்சினின்று சிரிப்பை
பற்பல நாள் விலக்கியவர் !!

தர்மத்துக்கு எதிராக
தர்மராஜாக
”போலீஸ்கார நாயே” என
அபூர்வ சகோதரர்களில்
அனேகரை மிரட்டியவர் !!
வில்லன் நடிகர்களையே
வில்லத்தனத்தால் விரட்டியவர் !!

நடிகர் திலகம் தொடங்கி
நடிகர் பலருக்கு
நீள் வசனமெனில்
நா ”கேஷ்” !!
நாலு வார்த்தை சொல்லுவதை
நம் முகம் சொன்னால்? என
நினைத்தவர் நாகேஷ் !!

”ஆன்மா தவிர
அழியக் கூடியவை அனைத்தும் !!
நடப்பன உண்டோ
நடந்ததையே நினைத்தும் ?

இருக்கும் விரல்களால்
இழந்தோரை எண்ணாதே !!
இருப்போரை மறக்கும்
இழி செயலை பண்ணாதே !!”

மனதிற்கு சொல்கிறது கீதை !!
மறந்தால் உருவாகிறது வாதை !!

இருப்பினும் நம்மை
இன்னோர் சிலரது
இழப்பு பாதிக்கின்றது !!
நிதம் அந் நினைவு
நிலையற்ற வாழ்வில்
நிலையற்றோர் நம்மை
சோதிக்கின்றது !!

விசிறி எனக்கே
விசும்பல் இத்தனை......
பாசறையில் பட்டை தீட்டிய
பாலசந்தருக்கு எத்தனை ?

அடித்துச் சொல்கிறேன்
அழுதிருப்பார் கே.பி !
அனேக தினங்கள் கேவி !!

”பாட்டுக்கு நாரதன்
வீணைக்கு வாணி
அழகுக்கு முருகன்
சொல்லுக்கு அகத்தியன்
வில்லுக்கு விஜயன்
ஆசைக்கு நீ
அறிவுக்கு நான் “

இவ் வசனம்
இனி கேட்கும் நாள்
இலங்கும் என்னுள் விசனம் !!

”நடிப்புக்கு சிவாஜி”
”நகைச்சுவைக்கு நாகேஷ்” என

நாமறிந்தென்ன ?
நாடறிந்தென்ன ?

தமிழகத்தின் இரு
தனிப் பெரும் நடிகருக்கு
தரப் படவில்லையே
தாதா சாகேப் பால்கே !!
தரச் சொல்லி அழுத்தும்
திராணி இல்லையோ
தமிழக “தாத்தா” ஆளுக்கே ?

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home