Wednesday, July 08, 2009

ஆடும் வரை அவர் . . .

mj_bad

1988…
கல்லூரியில் அப்போது தான்
கால் வைத்த வேளை !!
பதினாறு வயதில் நான்
பயமறியாக் காளை !!

தட்டுக்கு முன்
எட்டுக்கு அமர்ந்து

“போதுக்கு தின்னும் வக்கில்லா
போக்கறியான்” என்றவளோடு

போராடி வென்று....
போட்டததை தின்று.....

மட்டான அளவு
மதிய உணவு கையிலெடுத்து...
மதி பெருக்கும் புத்தகத்தை
மறவாது பையிலெடுத்து....

ஒரு வழியாய்
ஒன்பது மணிக்கு
ஒண்டிப் பிடித்து வண்டியேறி...
ஒண்ட முடியாதெனில்
ஓடியாடி முண்டியேறி...

ஒன்பதரைக்கு கல்லூரியில்
முதல் பாட வகுப்பில்
முன்னதாக ஆஜர் !!
புள்ளியியல் ”மேஜர்“ !!

நான் சேர்ந்து
நாளைந்து நாளுக்கப்புறம்

சிற்றிளம் பெண் ஒருவள்
சிறிது தாமதமாக சேர்ந்தாள் !!
படிப்பு, விளையாட்டென
பல கலைகளில் தேர்ந்தாள் !!

அறிந்திருந்தார் என் குடும்பத்தார்
அதற்கு முன்னம் அவளை
“மாயாவின்” தங்கையென!
அறிந்ததில்லை அனேகம் பேர்
அவளோர் வடிவான மங்கையென !

இந்தியப் பெண்ணுக்குரிய
இயல்பான உடலமைப்பில்
இருந்தாள் அவள் சன்னமாக !!
இன்றுவரை
இருந்து வருகிறாள்
நட்பின் சின்னமாக !!

அவள் பெயர் பிந்து !!
அந்நாளில் புரட்சியொன்று
அதுவாக நடந்தது
அவளெம் வகுப்புக்கு வந்து !!

அன்று முதல்
இன்று வரை

மேற்கத்திய சங்கீதம் என்னை
மேலோட்டமாகவும் ஈர்த்ததில்லை !
பல பாடகரை நான்
படத்திலும் பார்த்ததில்லை !!

கண நேரத்தில்
கர்நாடக சங்கீதமெனில்
ராகத்தின் போக்கறிவேன் !!
ரா முழுக்க முழிப்பினும்
”ராக்” அறியேன் !!

சட்ஜமும்
சதுஸ்ருதி ரிஷபமும்

சண்முகப்ரியாவும்
சஹானாவும்

செய்த தாக்கத்தை
கலைத்த தூக்கத்தை

She’s crazy like a fool ம்
She calls out to the man on the street ம்

சிறியேன் எனக்கு
சிறிதும் செய்யவில்லை !!
எனவே நான்
என் நினைவை

எந் நாளும் அவை மீது
எய்யவில்லை !!

அடியேனின் கல்லூரி
அமைந்திருந்த ஊர் தாம்பரம் !!
அது இருந்ததோ
அழகு சென்னையின் நகர்ப்புறம் !!

அந்நாளில் அவ்வூரில்
ஆங்காங்கே புழுதியிருக்கும் !!
எங்கு காணினும்
எண்ணற்ற சுவர் மீது
BAD என எழுதியிருக்கும் !!

அடியேன் நான்
அந்நாளில் அறிந்ததில்லை
அது ஒரு தொகுப்பென !!
நாளெல்லாம்
நான் கிடப்பேன்
நமக்குத் தொழில்
நம் வகுப்பென !!

பிரதி தினமும்
பிந்துவுக்கும்
பிறிதொரு மாணவருக்கும்

ஒலிநாடா பரிமாற்றம்
ஒருங்கே நிகழும் !!
பாடல் வரிகளை பிரதியெடுத்தே
பாதி போது திகழும் !!

They were absolutely
Mad about BAD !!
I just brushed it off thinking
Oh, Its just a Fad !!

ஒரு ஆசிரியர் வராத
ஒரு நாள்..
ஒவ்வொருவராக
ஒட்டு மொத்தமாக

ஏதோ ஓரிடத்தில் அடங்கினோம் !!
கமல் ரஜினி என
ஏதோ ஒரு பேச்சை
ஏனோ எதற்கோ
ஏக காலத்தில் தொடங்கினோம் !!

சீதளக் காற்று வீசிய
சீற்றமில்லாக் காலையில்
எங்கோ ஒரு மூலையில்....

நிகழ்ந்து கொண்டிருந்தது
நியமமாய் ஒரு உரை !
நிதர்சனமாய் காணமுடிந்தது
நிதானம் இழந்த இருவரை !!

நண்பன் ஒருவனுக்கும்
நண்பி பிந்துவுக்கும்

நிகழ்ந்தது சண்டை !!
உருண்டது மண்டை !!

..
..

”எவர்க்கும் தோற்காதவர்
எல்டன் ஜான் !!
எந்நாளும் அவரை
எதிர்ப்பார் எவர் தான் ?!

ஜகத்தை வெல்லப் போவது
ஜார்ஜ் மைக்கேலா ?

அடித்துச் சொல்வேன்
அவன் பாட்டை
அடியேன் செவிகள் கேளா !! “

யாருக்கு வேண்டும்
Tracy Chapman !!
Let’s make it clear
I am not a big fan !!

நகம் கடிப்பினும்
நகராது புகழ் வரிசையில்
"You got a fast car" !!

It’s surprising
It got thus far !!

..
..

மாறி மாறி
காறி காறி

போய்க் கொண்டிருந்தது வாதம் !!
எனக்கோ அச் சங்கீதம்
இரு காதம் !!

அடக்க முடியா கோபத்தில்
அப்படி என்ன தான் இருக்கிறது
அதில் ? என
அதிவிரைவாய் நான் கேட்க...

அனேகர் எழுந்தார்
அடி வாங்கப் போகும்
அடியேனை மீட்க !!

சிவந்தது பிந்துவின் செதில் !!
”கேட்டுப் பார்; தெரியும் !!
வந்தது பதில் !!

“ஜாக்ஸன் கேட்கும் ஜனம்
வேறொன்றை நாடா” !!
கைப்பை திறந்தது
கொடுத்தாள் ஒரு நாடா !!

அவள் தந்த
அந் நாடாவில் இருந்தன
அனேக பாடகரின் பாடல்கள்....
அவரவர்க்குரிய வழியில்
அவரவர் தம் தேடல்கள் !!

அதில் ஒன்றே
Annie are you Ok?
அமைந்திருந்தது அதனுள்
அசுரத்தனமான ஒரு போக்கே !!

ஏகமாய்க் கொண்டிருந்தது
ஏரார்ந்த ஒன்றை
ஏதோ ஒரு வழியில் !!
இயல்பிழக்கச் செய்தது
இன்னதென்று சொல்லமுடியா
இசையெனும் மொழியில் !!

விதம் விதமாய் கேட்டும்
விளங்கவில்லை பதம் !!
இருப்பினும் இருந்தது
இயல்பான ஓர் இதம் !!

கேட்ட மாத்திரத்தில்
கையும் காலும் ஆடியது !!
அனேக நாள்
அடியேன் நாக்கு
அப்பாட்டை பாடியது !!

உடம்பில் வந்தது
உண்மையாய் ஒரு சுரம் !!
இத்தனைக்கும் நான் கேட்டதோ
இரண்டொரு தரம் !!

அதைப் பாடிய
அன்பர் மைக்கேல் ஜாக்ஸன்
அந்தோ
அண்மையில் அமரரானார் !!
அவரொத்தாரை
அவனியார் இனி காணார் !!

மக்களை ஆட்கொண்ட ஜாக்ஸன்
மீளாத் துயிலில் வீழ்ந்துவிட்டார் !
தரணியெங்கும்
தமியேன் ஒத்த ரசிகர்கள்
தாளாத் துயரில் ஆழ்ந்துவிட்டார் !!

மைக்கேல் ஜாக்ஸனின் மறைவில்
மண்ணுலகு அறிய வேண்டும்
மகத்தான ஒரு அருத்தம் !!
நீளாது நமக்கது துடைக்கும்
நீண்ட நாள் வருத்தம் !!

இருக்கும் நாள் வரை
இவ் அவனி
இருப்பாரை புகழ்வதில்லை !!
அன்னார் எட்டிய
அளப்பரிய புகழை
அணு அணுவாக அகழ்வதில்லை !!

போதும் ஒருவரை திட்டியே
போய்விடுகிறது பொழுது !!
போன பின் ஆவதென்ன
போய் விட்டாரே என அழுது ?!

மகத்தான திறமையுடையோரை
மனதிற்கு உகந்தோரை
மனதார வாழ்த்துங்கள் !!
மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள் !!

எல்லா எண்களுக்கும் இல்லையே
ஏற்றமுடைய வர்க்கமூலம் ?!
நாமேன் பார்க்கிறோம்
நதிமூலம்? ரிஷிமூலம் ?

ஆணா ? அலியா?
பிள்ளைப் பாசமா ?
பகல் வேசமா ?

ஆராய்ந்து யாது கண்டோம் ?
நமக்கு உதவாததை
நாமேன் உண்டோம் ?!

அவனது ஆட்டத்தை..
அவனுக்கு சேர்ந்த கூட்டத்தை..

ஆராயவில்லை உலகு !!
அதுவன்றோ அவனது
அளப்பரிய புகழின் அலகு ?

இருக்கும் விரல்களால் நாம்
இருக்கும் நாள் வரை
இருக்கப் போவது
இழந்தோரை எண்ணியா ?
இதுகாறும் நண்பராய்
இருப்போரை எண்ணியா?

ஜகம் சாகினும்
ஜனங்களின் மனதில்
ஜாக்ஸனின் ஆட்டம் சாவா !!

சிக்குண்டு தவிப்பாரை
சிறிது தேற்ற
”சிக்கு புக்கு” ரயிலில்..

பிரதியெடுத்திருக்கிறார் அவரை
பிரபு தேவா !!

Labels: , , , , , , ,

2 Comments:

At 7/08/2009 3:37 PM , Blogger bindu said...

Your verses are really good! Lots of good memories from college days. BTW, I've sent your blog to Maya too. She was also impressed with your writing skills.

 
At 8/02/2009 1:55 PM , Blogger Balaji S Rajan said...

Ganesh,

Super! Super! Super! I read your poem to everyone in my family and there was a great silence. My children were speechless. All are stunned with your command and talent. Keep it up Ganesh!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home