Saturday, May 09, 2009

ராஜம் ஐயர் . . . . .

rajamiyermain

கர்னாடக சங்கீதத்திற்கு
காலங்காலமாய் ஓர்
குணமுண்டு !!
சிக்கித் தவத்திருக்கிறேன் நான்
சிலமுறை அதனால்
சினமுண்டு !!

ஒரு குறையற்று
ஒருமுறை
ஒருவர் பாடிக்கேட்ட
ஒரு பாட்டை. . .

பிசகின்றி பிறிதொருநாள்
பிறிதொருவர் பாடினும்
சரம் சரமாய் சுரங்களை
சங்கதிக்கு சூடினும்.....

மகோன்னதம் என
மனம் ஏற்காது !!

முன்னம் பாடியவரின்
முகம் முன்னிருக்க. . .

முற்றும் புதிய கோணத்தில்
முனைந்து பாடும்
முன்னாலிருப்பவரின்
முழு பலத்தை.....

முறுவலோடு உளம்
முழு மனதாய் பார்க்காது !!

பகலிலே கிளம்பி
பல வண்டி மாறி..
சபை சபையாய்
சளைக்காது ஏறி..

தெரிந்த பாட்டெனில்
சிரிப்பெடுத்து...
தெரியாத பாட்டெனில்
குறிப்பெடுத்து ....

அன்றைய நிகழ்வுகள் முடிந்து
அகம் போகுங்கால்

அந்நாளைய நிகழ்வுகளை
அசைபோடும் மனம் !!
ஒன்றை பொதுவாக
ஒப்புக்கொள்ளும் தினம் !!

கிரிபை – எம்.டி. ராமனாதன்
இன்னுடைய பாரதே – எம். எல். வி
ஸ்ரீ சுப்ரமண்யோ – டி.கே.ஜே
குழலூதி – சந்தானம்
ஜகதோதாரணா – எம். எஸ்
தேவி ப்ரோவ – கே.வி.என்
ஷீணமை – செம்மங்குடி

இறவாப் புகழுற்ற
இப் பாடலுள்
இருக்கிறது ஒரு சோகம் !!
இழையோடுகிறது
இரசிகர் முகத்தில்
இன்றதனை கேட்குங்கால்
முகாரி ராகம் !!

மேற்கூறிய
மேதைகள்

அவற்றை வைத்து
அந்த நாள்
அமைத்தனர்
அவரவர்க்குரிய இராசபாட்டை !!

”அது மாதிரியல்ல” என
அலுப்பு தட்டி
அரற்றுகின்றதே மனம்
அடி பிறழாது இன்று கேட்கும்
அதே பாட்டை ?!

அந்நாள்
அவரது பாணியே வேறு !!
அவர்க்கு மாற்று யாரு ?

இவ்வழி புலம்பிய
இன்றுவரை புலம்பும்
இயல்பிழந்தாருள்

அடியேனும் உண்டு !!
அம்மேதைகளின் நினைவே
அவர்க்கு நாம் செய்யும்
அளப்பரிய தொண்டு !!

அக்கணக்கின் எண்ணிக்கை
அண்மைக் காலத்தில்
ஒன்று கூடியது !!

கண நேரத்தில்
கர்நாடக சங்கீதத்தின் முகத்தில்
கவலைக் குறிகள்
கணக்கற்று ஒன்று கூடியது !!

ஜகம் போற்றும்
”ஜம்புபதே” யின்

முடி சூடா மன்னர்
முது பெரும் கிழார்
ராஜம் ஐயர் !!

அவர் சுரப்படுத்திய
அனேக பாடலுள்
அவ்வொரு பாட்டால்
ஐயர் போனார் Higher !!

கங்கா
காவேரி
யமுனா என

சவுக்க காலத்தில்
சரளமாய் ஐயர்

ஆறவமர அப்பாட்டை
அழகுற பாடுங்கால்....
அளவாய் தாளம் போடுங்கால்...

துளியுற்ற விழியினில்
தூரே இருக்கும்
திருவானைக்கா தெரியும் !!
விவரமறிந்தவர்க்கு நான்
விவரிப்பது புரியும் !!

காலம் காலமாய்
காதில் கம்மல்
அணிந்த அச் செம்மல்

காலனால் சமீபத்தில்
காலமானார் !!
வையம் விடுத்து
வைகுந்தம் போனார் !!

இனி
எவர் ஏற்றுவார்
என்னை புகழ் ஏணி ?!
இயல்பிழந்து
இங்கே கேட்கிறது
யமுனா கல்யாணி !!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home