Monday, December 28, 2009

சீனத் தயாரிப்பு. . .




மண்ணுள் அதுவொரு
மகத்தான தேசம் !!
உழைப்பு ஒன்றே அதன்
உன்னத சுவாசம் !!

மங்கோலியரைத் தடுக்க
மண்ணுள் அவரெடுத்த
மகத்தான சுவர்....

விண் வெளியினின்றும்
விரிவாய் தெரியும் !!
நானிலம் அதனை
நன்கு அறியும் !!

உள்ளளவிலும்
உதட்டளவிலும்

உலகிற்கு சீனா ஒரு
உருப்படியில்லா நாடு !!

அல்லும் பகலுமாய்
அதன் அவலங்களை
அளவிட்டு அரற்றியிருக்கின்றன

அகில உலகப் பத்திரிகைகள்
அனேக முறை !!

தியான்னமென் ஒடுக்குமுறை...
திபெத் அடக்குமுறை...

தாய் வானையின்றி
தாய்வானையும்
தனதாக்கிய முறை....

மனித உரிமைகளை
மதியா வழிமுறை ....

என அதன் முகத்தில்
எண்ணற்ற கறை !!
எதிலும் இல்லை
ஏற்புடைய நிறை !!

கணக்கற்ற கரிச் சுரங்கங்கள்
கண் மூடு நேரத்தில்
கட கடவென சரிய....

கண் மூடி
மண் மூடு முன்பாக

மண் மூடி
கண் மூடிய பன் மக்கள் !!

நீர் மின் நிலையத்தால்
நிலம் பெயரப்பட்டு

நட்டாற்று அணையால்
நட்டாற்றில் விடப்பட்ட
நன் மக்கள் !!

ஆலைகள் வெளிவிடும்
அசுத்தங்களால்
ஓசோன் பொத்தல்கள் !!

மெலமைன் கலப்படங்களில்
மெத்தனம் காட்டியதாக
மெனக்கெட்ட கத்தல்கள் !!

சிகரம் தழுவிய
சியாச்சன் எல்லையில்
பல நாளாய் பாரதத்தோடு
பனி எல்லைப் போர் !!

மறைமுக காரணங்களுக்காக
மறைமுகமாய் இலங்கைக்கு

பேருதவியாய் தந்த
போர் உதவி !!

அகல விரித்த விரல்களால்
அடுக்கலாம் இவ்வாறு
அர்த்தமற்ற சீனாவின் பிணியினை !!

என்று நாம்
எண்ணத் தொடங்குவோம்
எண்ண மறந்த பணியினை ?!

விதம் விதமாய் விளக்குகள்..
விளையாட்டு சாதனங்கள்..

கண் கவர் செருப்புகள்..
கண்ணாடி கோப்பைகள்..

கைப் பைகள்..
கையுறைகள்..

மர வேலைப்பாடு
மகத்தாய் அமைந்த
மஞ்சங்கள்..

அடியேன் இவைகளை
அண்மையில் வாங்கினேன் !!
அய்யோ என ஏங்கினேன் !!

அனைத்தையும் தயாரித்தது
அதே சீனம் !!
அதனால் வந்துவிட்டதா
அதற்கொரு ஈனம் ??

எவை எவைகளை
எவன் எவன்

எவ் வேளையில்
எவ் வேலையில்

எவ்வாறு செய்யவில்லை
என இயம்பியே நாம்

எதனையும் இன்று வரை
எடுத்துச் செய்யவில்லை !!

எண்ணிலா இந்தியர்
எழில் மிகு வாழ்வோடு
எள்ளளவும் உய்யவில்லை !!

சாண்டா கிளாஸென்றால்
சமூகத்திற்கு தேவைப்படுகிறது
சட்டென வெள்ளைச் சிகை !!

அதற்கன்றோ வெளிவிடுகிறது
அனேக சீன ஆலை
அளவில்லாப் புகை ??

வளர்ந்த நாடுகளின்
வளர்ந்து வரும் தேவையை

உடனுக்குடன் ஒரு தேசம்
உறுதுணையாய் தணிக்கிறது !!

இருப்பினும் அதனை
இகழ்வாகவே உலகம் கணிக்கிறது !!

மனித வளம்
மலிவாய் கிடைக்குமிடத்து

மதிய வேலையோ
புதிய வேலையோ

நாளை நடக்கும் !!
நானிலம் அத் தேசத்தை
நம்பிக் கிடக்கும் !!

அவ்வாறு சொன்னவர்
ஆடம் ஸ்மித் எனும்
பொருளாதாரத் தந்தை !!

மண்ணுக்கு இல்லையே
மகத்துவர் அவர் எழுதியதை
மனதாரப் படிக்கும் சிந்தை ?

உடுக்கும் ஆடையோ
படுக்கும் பாடையோ

சீனன் ஒருவன்
சீக்கிரம் செய்யும் வேலையில்

நேரில்லை எனில் அவனுக்கு
நிரந்தரப் பேரில்லை !!
அது வரை அவனிக்கு
அவனன்றி வேறில்லை !!

ஒட்டுறவாடாது
ஒத்து வராது
ஒரு நாடு

ஒருமொத்த உலகப் பொருளாதாரத்தை
ஒருமித்து மாற்றியிருக்கிறது !!
உலகம் அதனை தூற்றியிருக்கிறது !!

அவ் வேலையில் அவன்
அவதியுற்றானா ?
அசதியுற்றானா ?

"அவற்றுக்கு தேவை
கடின உழைப்பு !!
நமக்கு தெரிந்தவை
0 , 1 எனும் பிழைப்பு "!!

அறுதியிட்டு சொல்கிறேன்
அவ்வாதம் நமக்கு
அனாவசியம் !!

அவ் வேலை இந்தியர்க்கு
அமையவில்லையே என
அனுதினம் எண்ணுதலும்.....

அவனை விட நாம்
அழகாய்ச் செய்வோமெனில்
அதற்குரியன பண்ணுதலும்

அனைத்து இந்திய அரசியலாளருக்கும்
அதிகம் பேசும் அகிலத்தாருக்கும்
அத்தியாவசியம் !!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home