குளிர் கால வருணனை. . .
அடர் பனி…
தொடர் பனி…
அதிகம் இதனை
அடியேனின் ஊர் கண்டதில்லை !!
அதன் தாக்கத்தையும்
அதனால் தொலைக்கவிருக்கும்
அமைதியான தூக்கத்தையும்
அனேகர் கருத்தில் கொண்டதில்லை !!
பகல் 12 மணிக்கு
பனி தொடங்கும் என
எச்சரிக்கை எட்டிய
எட்டாம் நேரத்தில்
நடக்கும் சில சம்பவங்கள்
நம்மை வியப்பில் ஆழ்த்தும் !!
வல்லரசு நாட்டின்
வலிமையையும் அது
வலுவாய் வீழ்த்தும் !!
பள்ளியில் படிக்கும்
பாலகர் வீடுகளில்
”சீக்கிரம் வானிலை இன்று
சீரிழக்கும் பட்சத்தில்
பாதி நாளில்
பள்ளி மூடிடும் !!
பெற்றோரை பேணிட
பெற்றோர் நீவிர்
பிற வழி தேடிடும் ” !!
என தொலைபேசி
எழும் வேளையிலேயே அலறும் !!
அகத்தில் வைத்துக்கொள்ளலாமா?
அனுப்பலாமா? என
என்ன செய்வதென்றறியாது
எண்ணத்தில் பதைபதைப்பர்
என்னொத்த பலரும் !!
கடையில் பாலும் ரொட்டியும்
கண நேரத்தில்
காணாமல் போகும் !!
பனி வழிக்க உதவும்
பல உபகரணங்கள்
பரபரப்பாய் விற்பனை ஆகும் !!
வேலையில் பலரும்
வேலைக்கு வந்த காலையிலிருந்து
வேறு வேறு மூலையிலிருந்து
வானம் பார்ப்பர் !!
அடுத்த நாளே அம்புவி
அழிந்து போவது போல்
அர்த்தமற்ற கவலைகளை
அளந்து தீர்ப்பர் !!
” அன்று என்று? என
அறுதியிடமுடியாத அன்று
அடந்து பெய்த
அப் பெரும் பனியில்
அனேக மரம் முறிந்தது !!
அகிலமே அதனை அறிந்தது ” !!
இது தான்
இம்முறையும் நடக்குமோ ?
நெடுக நினைந்தே
நெஞ்சம் படபடக்குமோ ?
சொன்ன நேரத்தில் பனி வர...
சாலைகளை சரிவர
சறுக்கும் சரிவற
அரசு பராமரிக்குமா ?
அல்லது சோளத்தை
அன்று போல் இன்றும்
அது கொரிக்குமா ?
எழிற் சாலை வழுக்கினால்
தொழிற்சாலைக்கு நாம்
அதி காலையில்
அழைத்த வேளையில்
அதிவிரைவாய் செல்லுதல் சிரமம் !!
இன்றே மேலாளருக்கு
இதனை சொல்லுதல் கிரமம் !!
மனை ஆளும்
மனையாளுக்கும்
புலம்பலுக்கு பஞ்சமில்லை !!
எத் தரப்பினருக்கும்
எப்படிப் பார்ப்பினும்
எதிர் வரவிருக்கும் பனியை
எதிர் நோக்கும் நெஞ்சமில்லை !!
விமானங்கள் இயங்குமா ?
தரை வழுக்குமேயாயின்
தரையிறங்க தயங்குமா ?
நாமிருக்கும் ஊரில்
நாள் கிழமை என்பதற்கு
நாதியில்லை !!
இருக்கிறோம் என்பது தவிர
இன்ன பிறாருக்கு
இம்மியும் நம்மைப் பற்றிய
இனிய சேதியில்லை !!
நாளும் கிடக்க
நாள் நட்சத்திரம் பார்த்து
நம்மையும் காணலாமென்று
தொலைவிலிருந்து விடுமுறைக்கு
தொல்லை தரு உறவினரும்
தொலை தூர உறவினரும்
வர இருக்கின்றார் !!
வரவிருக்கும் பனிப்பொழிவால்
வரவிருப்பாரும்
வர மறுக்கின்றார் !!
கணக்கற்ற கடைகளும்
கண்ணீர்க் கதைகளை கொட்டுகின்றன !!
கவலையில் வானிலையை திட்டுகின்றன !!
வரும் வாடிக்கையாளர்
வராது போனால்
வரவிருக்கும் பனியால்
வரவிருக்குமா ?
ஏற்கனவே தொழிலில்
ஏற்றம் இல்லா முடக்கம் !!
இனியொரு தொல்லை
இப்பனியால் இன்று தொடக்கம் !!
எதிர் வரும் பனியை
எதிர்கொள்ளும் விதத்தை
எண்ணிலார் எண்ணியிருக்க.....
எஞ்சிய சிலர்
எடுத்த காரியத்தை பண்ணியிருக்க…
குறித்த நாள்
குறித்த வேளை
குறித்த அளவு
குறித்த காலம்
பெய்கிறது பெரும் பனிமழை !!
தம்பித்த மனிதன்
தனித்து சிந்திக்க வேண்டும்
தனது சிறிய பிழை !!
துருவத்து பனிக்கட்டிகள்
துளித் துளியாய் உருகுகின்றன !!
சோலையாய் இருந்த வனங்கள்
பாலையாய் கருகுகின்றன !!
உலகின் வெட்ப நிலை
உடனுக்குடன்
உயர்ந்து வருகிறது !!
El Nino
La Nina என
மாற்றி மாற்றி மாற்றங்கள்
மாளாச் சோகம் தருகிறது !!
கட்டை விரலளவு
கடல் உயர்ந்தால்
பற்பல தேசங்கள்
காணாமல் போகும் !!
அடுத்தடுத்த சந்ததியும்
அத்தகு தேசங்களை
காணாமல் போகும் !!
இத்தகு எச்சரிக்கைகட்கு
இத்தனை நாள்
இவ்வுலகில் யார்
செவி மடுத்தார் ?
சுற்றச்சூழல் என்றாலே
முகம் கடுத்தார் !!
வாடிய பயிரை கண்டபோதே
வாடிய வள்ளலாரும்
முல்லைக்கு தேர் ஈந்த பாரியும்
மயிலுக்கு போர்வை தந்த பேகனும்
கோபனேகனும்
உணர்த்தும் உண்மையென்ன ?
உணராது நாம்
உய்வதில் நன்மையென்ன?
உன்னை மட்டும் பாராது
உலகத்தை பார் என
உரக்க எச்சரிக்கை விடுக்கின்றன !!
செய்வன யாவும்
செவ்வனே செய்தல்
அதுவே நமக்கிட்ட
அற்புதமான முதற்பணி !!
அப்படிச் செய்யின்
அழ வைக்காது
அதிகாலை பெய்த
அரையடி முதற்பனி !!
Labels: copenhagen summit, el nino, first snow in winston salem, la nina
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home