Monday, March 26, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 06


vaalivalayapatti_subramaniam


தமிழனை தலை
தூக்கச் செய்தவை
வாலியின் கவியும்
வலையப்பட்டி தவிலும்

தமிழும்
தமிழ் இசையும்
தரணியில் நிற்கும் வரை
தமிழர் நா இதனை
நாளும் நவிலும்

தமிழ்நாட்டில்
தமிழர்களுக்கு பிறந்து
தொன்மொழியாம் தமிழின்
சிறப்பை மறந்து

"என்கு டமில் வராடு"
என மானமற்று பேசும்
மானுடரே !
கொட்டிக் கொட்டிக்
கொடுத்து
வெட்டி வெட்டி
ஆட வைக்கும்
வக்கில்லா இசையை
கேட்கும் மூடரே !!

வாலியை ஒருமுறை
வாய் விட்டு படி !!
அறவே அற்றுப் போகும்
அந்நிய மொழிகளின்
அவசியமில்லா நெடி !!

கேள் ஒருமுறை
வலையப்பட்டியின் லயம்
இதயம் இழக்கும்
வயம் !!

அவ் இசை
இசைக்க நீ
இசை !!
இயலாக்கால்
இயன்ற வரை செல் அவ்
இசை இருக்கும்
திசை !!

தமிழ் மொழியை
தமிழ் இசையை
தலைக்கு மேல்
தாங்கு !!
கழுத்தில் உள்ளதை
கொடுத்தாவது
எழுத்தில் உள்ளதை
விலை கொடுத்து
வாங்கு !!

விளங்கும் உனக்கு
தமிழறிஞர் தம்
பாங்கு !!
விலகும் உனது
விலை போகாத
பாசாங்கு !!

காண்பாய் ஒரு
கட்டிலடங்கா சுகம்
வலையப்பட்டி வார்
பிடித்தால் !!
வாலியின் சீர்
படித்தால் !!

முடிந்தால் கண்டு பார்
அவரை நேரிலும் !!
அவர்க்கிணை வேறு உண்டோ
பாரிலும்?
காண இயலாது அவர் திறன்
யாரிலும் !!

முத்தாய்ப்பாய் ஒன்று கூறி
முடிக்கிறேன்

தமிழின்
தமிழிசையின்
கடைசி மூச்சு வரை

வாலி இருப்பார்
கீதத்தில் !
வலையப்பட்டி இருப்பார்
நாதத்தில் !!

-- முற்றும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home