Wednesday, June 20, 2012

தீர்த்த(ர்) யாத்திரை



அவரது உடை
அனுதினமும் காவி !!

ஆழங்காற்பட்ட அதுவைதிகளுக்கு
அவர்
ஆதிசங்கரரின் ஆவி !!

பிறவாமை வேண்டுவோர்
பிறவிப் பெருங்கடல்
பிழையறக் கடக்கப்

பிறவியெடுத்த
பிரத்தியேக துருப்புச் சாவி !!

”சாதுர் மாஸ்ய”த்திற்கு இச்
சாது

சேவடி பணிந்து
சேவித்தோர் அழைப்பிற்கு
செவி மடுத்து

சிற்றுலா எண்ணத்தோடு
சிருங்கேரி விடுத்து

ஆண்டு பதினேழு
ஆன பின்னர்

பாதாரவிந்தங்களை சென்னையில்
பாவியுள்ளார் !!

முன் வாசல் வந்த
முனிவு கொள்ளா
முனிவனின்

செங்கமலக் கண்களை
செம்மையாய் காணாது..
செங்கழல் பரவி
செய்கைகளுக்கு நாணாது..

சென்னையில் பாவியுள்ளார் !!

நேர்மைக்கு
நேரம் ஒதுக்கிய
நேரியர் பலர்

முதல் வணக்கமும்
முகமனும் கூறி..

ஆன்மப் பசி
ஆங்குற ஆறி..

பழவினை மறந்தார் !
பழங்குறை துறந்தார் !!

தருமத்தின் காவலரே !
தவ சீலரே !!

உயர்ந்த உள்ளத்தோடு
உமது வருகை

எம்மவர்க்கு வேர்ப் பலா !!
எண்ணற்றோரை ஈர்க்கிறது
எளியோன் நிந்தன்
எழிலான நகர் உலா !!

இருப்பினும்…
சிந்தனையொன்று எனைச்
சிறிது தைக்கிறது !!
என் நாட்டார் செயல்
எனக்கு கைக்கிறது !!

துறந்தவன் துறவி !!
மறந்தவன்
மற்றுமொரு பிறவி !!

உறவினின்று உழலாது
பிறவினையால் கழலாது
துறவியுன்னை

பழமறை
பறை சாற்றுகிறது
பந்தம் விடுபட
பற்றிக் கொள்ளும் கம்பமாய் !!

ஊண் உறக்கம் விடுத்து
ஊருக்கு ஊர்
ஊரார் ஏன் நிற்கிறார்
பூரண கும்பமாய் ?

முனிவனுக்கு எதற்கு
முச்சந்தியில் வரவேற்பு ?!
கொண்டலுக்கு எதற்கு
கொசுவின் அழைப்பு ?!

துங்கா நதி
துள்ளும் நகரம் விடுத்து

முங்கா நகரம் வந்த
முதல்வனே !

வெட்ட வெளியில் எதற்கு
நானாவித கீதமும்
நான்மறை வேதமும் ?!

பூட்டிய அரங்கினுள்
பூ ஆரம் புழங்கட்டும் !!
தேவாரம் முழங்கட்டும் !!

வனவாசிக்கு எதற்கு
தனவாசிகளின் தாராளம் ?
தவ வலிமையே
தவசிக்கு ஏராளம் !!

பழம்பரை வழக்கம் எனும்
பழமையான வாக்கும்..
பண்பு எனும்
பழம்பெரு சாக்கும்..

இவையொத்த செய்கைகளுக்கு
இயம்பப்படும் நியாயம் !!
நமக்கன்றோ இதனால்
நாளும் காயம் ?

இந்து மதத்தின்
இலட்சியங்களை
இலக்கணங்களை
இவை இறக்குகின்றன !!
பாசக் கயிறாய்
பாதாதிகேசம் இறுக்குகின்றன !!

நித்தியம் ஆனந்தமில்லா நாட்டில்
நித்தியானந்தாக்கள்
நிறைவுற இதனால்
நிறைந்து விட்டனர் !!
நியாயவாதிகள்
நிதம் ஒன்றாய்
குறைந்து விட்டனர்!

தம் பட்டம் இருக்கும் வரை
தம்பட்டம் தவிர்க்க

ஆச்சாரியர் நீர்
ஆணை இடுங்கள் !!

இழந்த பெருமையை
இமாலய வலிமையை
இன்றே நம் சமூகத்திற்கு
பெற்றுக் கொடுங்கள் !!

தீர்த்தரின்
தீர்த்த யாத்திரை
தீமை
தீர்த்த யாத்திரை

என
அவனி இயம்பட்டும் !!
அமளியும் ஆடம்பரமும்
அறவே அடங்கட்டும் !!



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home