Tuesday, October 16, 2012

வீழ்ச்சி

தலைவர் கை
தண்ணீர் குடித்தும்

தலைமுறை தலைமுறையாய்
தீர்ப்புக்கும் தீர்வுக்கும்
சாட்சியாய் சமைந்தும்

வெட்டினால் வேல்கம்பு
வீழ்த்தினால் விறகு என
வீர முழக்கமிட்டும்

ஊராரின் விலாசத்தில்
ஒரு வரியாகியும்

சாதல் காதல் மோதல்
சலிக்காது கண்டும்

தறி கெட்டு ஓடி
பொருதி மாண்டாரோடு
பொறுமை காத்து
புகைப்படத்திற்கு நின்றும்

செத்தோரை எண்ணும்
செய்தி இல்லா
செய்தித்தாளில்

பிழைத்தோர் கணக்கில்
வரவு வைக்கப்பட்டும்

வெறும் நிழல்
வெந்தழல்
வேறுபாடு வலியுறுத்தியும்

காலம் காலமாக
கல்லடி கண்டும்
காற்று சாதகமாகும் என
காயத்தை காயவிட்டும்

மஞ்சள் குங்குமத்தோடு
மங்களகரமாய்
கண்டிராக் கூட்டம்
பெண்டிராய் துதித்தும்

கல்யாண வரன்
கைக்கு காசு
ரோடு டெண்டர் என

மஞ்சள் துணியில்
மடித்த மசோதாவை
மடியில் தாங்கியும்

பாட்டில் போற்றப் பட்டும்
ஏட்டில் ஏற்றப் பட்டும்

அரசளித்த எண்ணை
அனுதினம் அணிந்தும்

முதியோர் விடுதிக்கா ?
மனநல விடுதிக்கா என
விலை பேசப்பட்டு

துயரில் துக்கித்தது
தானே புயலில்
தானாய் வீழ்ந்த மரம் !

Thursday, October 11, 2012

எங்கோ வாழ்க்கைப் பயணம்..


மூன்று நாள் முன்னம்
மூன்றுக்குள் வா என
மூதுரை வாங்கிய
மூன்று சக்கர வண்டி
மூச்சிரைக்க வாசலில்

ஏக காலத்தில் எழும்
எமகண்ட ராகுகால
எச்சரிக்கைகள்

புறப்படு பொழுதோடு என
புகலப்படும் நச்சரிப்புகள்

போவது போருக்கா
ஊருக்கா என வினவுமாறு
நெற்றியில் இடப்படும்
வீரத் திலகம்

’போனதும் போடு பதில்
உடம்பைப் பார்த்துக் கொள்
சமர்த்தனாய் படி’
ஆதிநாள் தொட்டு
ஆழங்காற்பட்ட அறிவுரைகள்

என்றும் இல்லாது
எல்லோருக்கும்
எங்கிருந்தோ தலைகாட்டும்
ஏக்கமும் பாசமும்

என்றோ திரும்புகையில்
எடுத்துச் சென்றதை
எடுத்து வருவதற்கும்
உடன் வந்தது
உள்ளதா என்பதை
உடன் உரைப்பதற்கும்
உடைமைகள் குறிப்பு

வழியில் வாசிப்பதற்காக
வாங்கப்படும்
வாரப் பத்திரிகைகள்

வழிபாட்டோடு
வழிப் பிள்ளையாருக்கு
படைக்கப்படும்
உடைக்கப்படும்
கடைத் தேங்காய்கள்

வேராழமா
பேராழமா தெரியாது
சேமநலம் பாராது
சேற்றை ஒட்டியே நிறுத்தப்படும்
சொகுசுப் பேருந்து

உட்காரு முன்
உட்காரும் உடைமைகள்

எல்லா நாள் ஓடியும்
என்றும் ஓடாதது போல்
துடைக்கப்படாத இருக்கைகள்

பிற இருக்கைகள் பளபளக்க
தனது மட்டும் பிய்ந்திருக்கும்
தாளொணா தரித்திரம்

முன்னம் இருந்தோரது
முன்வினை சொல்லும்
பெருக்கப்படாத தரைப் பலகை

இது எனது
இருக்கை எனும்
கேட்டுப் புளித்த சர்ச்சை

ஏதேனும் மறந்தோமோ என
வந்து வந்து போகும் கவலை

வளைவுகளுக்கு உதவும் என
பக்கத்து இருக்கைதாரர்
பத்திரப்படுத்தும்
பெட்டிக் கடை எலுமிச்சை

விழுந்து விடுமோ என
வினாடிக்கு வினாடி
விழி வைக்கப்படும்
தலை மேல் அமர்ந்த
பிறரது மூட்டைகள்

தூரத்தில் முணுமுணுக்கப்படும்
ஆதித்ய ஹ்ருதயமும்
அனுமான் சாலீஸாவும்

சொறி சிரங்கு களைய
மூலம் பவுத்திரம் மறைய
இல்வாழ்க்கை இனிக்க
இட வலமாய் சுவரொட்டிகள்

இல்லாக் கட்சிக்கு
இருக்கும் இடங்களிலெல்லாம்
இறக்கை கட்டிப் பறக்கும்
இலட்சியக் கொடிகள்

தனியார் என்றாலும் இதன்றி
இனி யார் என
அரிசி மூட்டை ஏற்ற
அடுக்கப்படும் கெஞ்சல்கள்

இறங்கும் இடத்தில்
இனி பிற
எனும் வேளையில்
எதிர் வண்டியில் தெரியும்
”எங்கேயும் எப்போதும்”

பக்கத்தில் இருப்பவன்
பதவிசானவனா எனும்
பதிவிரதைகளின் கண்ணோட்டம்

ஒவ்வொரு மகவும்
ஒவ்வொரு மூலையில்
ஒவ்வொரு செய்கையில்
ஒவ்வொன்றை மென்று இருக்க
“ஈன்று புறந்தந்த” களிப்பில்
ஒய்யாரமாய் அமர்ந்த தாய்

எல்லா பயமும் தேக்கி
எப்பயமும் இல்லாதது போல்
தூங்க முயலும்
தூரத்து இருக்கைப் பெண்

“கள்ளொற்றி கண்சாய்பவர்”
குறளின் கீழ்
குடி போதையில்
குறட்டை விடும்
குடி காரன்

ஹல்வா
பூ
பிஸ்கட் என
சேர்ந்து இருப்பார்க்கோ
சேருமிடத்து இருப்பார்க்கோ
சேர்க்கப்படும் பொருட்கள்

வண்டிச் சக்கரத்தின் சுழலில்
வழித் தடத்தில் நசுங்கி
வாழ்க்கையை நோகும்
கண் திருஷ்டி பூசணிகள்

மாநகர எல்லையில்
மோவாயில் விரல் பதித்து
நாசூக்காய் கும்பிடப்படும்
காவல் தேவதைகள்

நில்லாத் தடங்களில்
அவ்வப் போது
அசைக்கப்படும்
”கோலா” கட்டை விரல்கள்

தெருவில் கதிர் பரப்பி
நவீனப் போரடிக்கும்
விவசாயக் கும்பல்கள்

சொர்க்கம் அழைக்கிறது எனும்
சுவிசேட கூட்டங்கள்

ஊர்தி நிற்கும்
உணவு இடைவேளையில்
சாப்பாட்டுக்கு கூட்டம் சேர்க்கும்
சிபாரிசாளன்

அரசும் அவனியும்
அல்லும் மறந்தும்
கருமமே கண்ணாய்
கடை விரித்திருக்கும்
கை வினைப்பொருள்
கலைஞன்

வண்டி வந்தாச்சுடே! என
கடிகாரத்தின் மணி மாற்றும்
கடை முதலாளி

வண்டி புறப்பட்டதும்
வாராமப் போறானே என
தோரணையாய் முறைக்கும்
தேயிலை கடைக்காரன்

எவரோடும் பேசலாமா
ஏதேனும் படிக்கலாமா எனும்
நாள்பட்ட போராட்டம்

தோழா! வெற்றி உமதே! என
தோள் தட்டும்
சமீபமாய் கண் விழித்த
பின் இருக்கை
பொக்கைக் குழந்தை

இடம் சேர்ந்தாச்சா என
இடம் தெரியாது
இடைவிடாது
சினந்து விசாரித்து
சிணுங்கும் கைபேசி

வழிப் பயணமும்
வாழ்க்கையும்

ஒத்துத் தான் இருக்கின்றன
ஒன்றுக்கு ஒன்று
ஒன்றைத் தவிர

முடிவு !



Tuesday, October 09, 2012

குளிர்

முயன்று பெறா சுதந்திரத்தை
முழக்கும்
முடக்கப்பட்டிருந்த ரஜாய்..

ஓராண்டு ஓய்வினின்று
ஓதத்தின் ஈரம்
காட்டும் சுவர்கள்
மூட மறுக்கும் கதவுகள்..

சூட்டிற்கு வீட்டிற்குள்
காலுறையுள்
கால் நுழைக்கும்
பாதங்கள்…

தங்கு தடையின்றி
தடுக்கிடும் இடங்களிலெல்லாம்
தவளைகள்…

சோம்பலோடு
வெந்நீருக்கு
வெளி வரும்
வெங்கலப் பானைகள்…

சன்னமாக
மக்கியதன் சின்னமாக
பற்ற வைக்காமலே
புகை கக்கும்
விறகுக் கட்டைகள்…

எரியலாமா எனும்
எண்ணத்தோடு
எங்கோ தூரத்தில்
எழும் தீ சுவாலை..

”அகலாது அணுகாது”
கையை நம்பியாராய் தேய்த்து
கட்சிக் கும்பல் போல்
அதைச் சுற்றியும் ஒரு
அவசரக் கூட்டம்..

காய்ச்சிக் குடிக்க
கருப்பட்டியும்
காய்ச்சலுக்கு உதவும்
காயங்களும்
தைல மர
தைலமும்
சரும வறட்சி
சர்வ நிவாரணிகளும்
வருகைப் பதிவை பதித்த
வாங்க வேண்டிய பட்டியல்..

மடித்து விடப்பட்ட
முழுக்கை சட்டைகளில்
நேர் செய்யப்படும்
கைப் பொத்தான்கள்

சாயா
பாயா கடைகளில்
”கோலா” இளைஞர்கள்..

மஞ்சள் பூசணிக்கு
மடல் வரைந்து
வேலை முடிந்ததென
விடை பெறும்
தர்பூசணி கொடிகள்…

தைலக் காப்பிற்கு
தயார் ஆகும்
தகத்தகாயமான தெய்வங்கள்…

மார்கழிக் கோலங்களை
மனனம் செய்யும்
மாதரசிகள்…

தோரணமாய்
துணி காய
மின் விசிறியின் கீழ்
மிளிரும் புதுக் கொடிகள்..

திரும்பவும் திருப்பப்படும்
திருப்பாவை புத்தகங்கள்…

தளிர் காலம் தேடி
தவிக்கும் தாவரங்கள்

டில்லியின் வெட்பநிலை
தினம் பார்க்கும்
வடக்கில் மகன்
வாழும் வீடுகள்

”சீசனை” நினைந்து
தொண்டையை செருமும்
பாடகர்கள்

ரயில் ஓடத் தொடங்கியதும்
ரகசியமின்றியே மூடப்படும்
ஜன்னல்கள்…

மொத்தத்தில்..
ஊரெங்கும் நடுக்கம் !!
குளிரின் தொடக்கம் !!